பக்கம் எண் :

180கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1119 திங்கள் அணிந்து தில்லைச் சிற்றம் பலத்தாடும்
தங்கையொரு பாகன்செய் நல்லருளால் பொங்குதமிழ்
பொன்னாடு போற்றப் புதுமணம்வீ சிக்குமுதம்
எந்நாளும் வாழ்க இனிது.

175. 'தமிழ் நாடு'

1120 தென்னாடு முற்றும் திருந்திச் சிறப்பெய்திப்
பொன்னாடு போலப் பொலிந்திடவே - எந்நாளும்
நாடுபுக ழுந் 'தமிழர் நாடெனு'மிப் பத்திரிகை
நீடுலகில் வாழ்க நிலைத்து.

1121 ஆக்கமும் பேரறிவும் ஆண்மையும் செய்வினையில்
ஊக்கமும் மக்களிடை ஓங்கிடவே - நீக்கமற
நந் 'தமிழர் நாடு' நலங்கண்டு தொண்டாற்றிச்
சந்ததமும் வாழ்க தழைத்து.

176. நேதாஜி

1122 வங்கம் வளர்த்த சிங்கமென
     வையம் முழுதும் ஓங்குபுகழ்
எங்கள் வீரன் நேதாஜி
     இனிய பெயரால் எழுந்துதமிழ்
பொங்கி வளரும் திருநாடு
     போற்ற வரும்இப் பத்திரிகை
மங்கை பாகன் அருளாலே
     வாழ்க! வாழ்க! வாழ்கவே!

177. யுவதி

1123 எத்தொழிற்கும் முன்வந் தெமக்குத் துணைபுரியும்
அத்திமுகத் தண்ணல் அருள்வலியார் இத்தரையில்
செந்தமிழ் நாடு சிறக்க யுவதிநீ
வந்துநிதம் வாழ்க வளர்ந்து

1124 கண்ணகியை ஒளவையைக் காரைக்கால்
பெண்ணரசி ஆண்டாளைப் பெற்ற பேரும் - புண்ணியஞ்சேர்
செந்தமிழ் நாடு சிறக்க யுவதிநீ
சந்ததம் வாழ்க தழைத்து.