பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு189

Untitled Document
199. ராமகிருஷ்ண விஜயம்

1171 இனிய தமிழில் செந்தமிழில்
     என்றும் தழைத்து வருந்தமிழில்
கனியும் பாலும் தேனும்கற்
     கண்டும் அனைய கட்டுரைகள்
புனித கவிகள் கதைக ளெல்லாம்
     பொலிய வரும்இப் பத்திரிகை
நனியிவ் வுலகில் வாழவரம்
     நங்கை பாக நல்குகவே

1172 அளத்தற் கரிய பலசமய
     ஆக மங்கள் அத்தனையும்
களக்கம் அறவே இரவுபகல்
     கற்ற பெரியார் யாவருமே
உளத்திற் கண்டு தெளிந்தபொருள்
     ஒன்றே என்னும் உண்மையினை
விளக்க வந்த ராமகிருஷ்ண
     விஜயம் வாழ்க! வாழ்கவே !

1173 கற்றுத் தேர்ந்த பண்டிதரும்
     காணற் கரிய பரம்பொருளை
முற்றி முதிர்ந்த அன்பாலே
     முழுதுங் கண்ட மாமுனிவன்
சொற்ற நெறியை மக்களுக்குத்
     துலங்கச் செய்து நாடெங்கும்
வெற்றி காணும் ராமகிருஷ்ண
     விஜயம் வாழ்க! வாழ்கவே!

1174 திருத்தம் உறவே மக்களெல்லாம்
     செய்தற் குரிய பணிசெய்து
வருத்தம் இன்றி இருமையும்நல்
     வாழ்வை அடையும் வழிகாணப்
பொருத்த மான உண்மைகளைப்
     பொறுக்கி இனிய செந்தமிழில்
விரித்துக் கூறும் ராமகிருஷ்ண
     விஜயம் வாழ்க! வாழ்கவே!