பக்கம் எண் :

188கவிமணியின் கவிதைகள்

Untitled Document
195. பாரத சக்தி
1164 கந்தன் முருகன் கடம்பன் கதிர்வேலன்
செந்திற் குமுரன் திருவருளால் - சிந்தைமகிழ்
தந்துநிதம் பாரத சக்தி தவறாது
வந்துலகில் வாழ்க வளர்ந்து.

196. விந்தியா
1165 பைந்தமிழ் எங்கும் பரிமளிக்கப் பம்பாயில்
விந்தியா என்றும் விளங்கவே - முந்துபுகழ்
மன்னும் முடிசூடி மாமதுரை நாடாண்ட
அன்னைமீ னாட்சிஅரு ளால்.

1166 நாற்றிசையும் காண நடுவெழுந்த மாமலைபோல்
ஏற்றியமெய்த் தீபமென யாவருமே - போற்றவரு
விந்தியாப் பத்திரிகை மேன்மேல் வளர்ந்திடுக
இந்தியா நாட்டில் இனிது.

1167 மக்களெல்லாம் ஒன்றுபட்டு வாழும் வழியறிந்து
சிக்கலறக் காட்டிச் சிறப்பெய்தி - மிக்கபுகழ்
வித்தகர் போற்றவரு விந்தியாப் பத்திரிகை
நித்தமும் வாழ்க நிலத்து.

197. சௌபாக்கியம்
1168 நாடும் நகரும் நகர்ப்புறமும் நன்றாக
வீடும் குடியும் விளக்கமுறப் - பாடுபட்டு
மன்னுலகில் சௌபாக்கியம் வாழ்ந்திடுக மாமதுரை
அன்னைமீ னாட்சிஅரு ளால்

1169 ஒளவை வளர்த்த அமுதத் தமிழ்மொழியைச்
செவ்வையுறக் காட்டிச் சிறந்தோங்கி - இவ்வுலகில்
பல்லாண்டு சௌபாக்கியம் பார்மீது வாழ்ந்திடுக
எல்லாரும் போற்ற இனிது.

198. நல்லாயன்
1170 பாவ இருளகற்றும் பானுவாய் வந்துதித்த
தேவ குமரன் திருவருளால் - பூவுலகில்
நல்லாயன் வாழ்கஎந் நாளும் தமிழ்மக்கள்
எல்லாரும் போற்ற இனிது.