பக்கம் எண் :

192கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1185 நெற்றி நிறைந்த நீறுடையான்,
     நெஞ்சில் பஞ்சாச் சரமுடையான்,
முற்றி முதிரும் அன்பாலே
     மூவர் தமிழும் பயில்நாவான்,
சுற்றம் தழுவும் குணசீலன்
     தூய நெறிகண் டொழுகிடுவான்,
கற்ற பெரியோன் கதிரேசன்
     கடவு ளருளால் வாழியவே!

204. தமிழ்ச்சுனை

1186 வண்ண மலர்கள் மணம்வீசி
உண்ண அமுதம் உதவுமே - எண்ணியவர்
சிந்தை மகிழத் திருவார் இளங்கவிஞன்
தந்த தமிழ்ச்சுனை தான்.

1187 புத்தகக் காட்டில் புகுந்த களைபுற்றது
இத்தனையும் போதுமினி என்னெஞ்சே - நித்தமும்
தண்ணிழல் தங்கித் தமிழ்ச்சுனையில் இன்னமுதம்
உண்ணலாம் வாநீ உவந்து.

வேறு

1188 ஆவல் மிகவே அன்பரெலாம்
     அரிய அமுதம் இதுவென்ன
நாவிற் கினிய தமிழ்ச்சுனையை
     நாடி நமக்குத் தந்தமகன்
பாவின் சுவைகள் பரந்தொழுகப்
     பாடும் பகவ திப்பெருமாள்
சேவ லுயர்த்தோன் திருவருளால்
     தினமும் வாழ்க வாழ்கவே!

205. பாரதி தமிழ்ச் சங்கமலர்

1189 அப்பாலுக் கப்பால்நின் றாளும் பெருமாளே
ஒப்பாரு மில்லா ஒருவனே - இப்பாரில்
பொங்கு புகழ் பாரதிபேர் போற்றும் இனியதமிழ்ச்
சங்கமலர் வாழவரம் தா.