பக்கம் எண் :

198கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு
1213 நித்தம் இளமை நிலைக்கும் படியீசன்
வைத்தில னேயென்று வருந்துகின்றேன் - சித்த மகிழ்
சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடுமிப்
புத்தகத்தைப் பார்க்கும் பொழுது.

1214 கன்னலும், கண்டும், கனியும் அனையகவி
சின்னஞ் சிறுவருக்குச் செய்தளித்தான் - மன்னு தமிழ்ப்
பூவலந்து வாசமெழும் 'பூஞ்சோலை' ஆசிரியன்
பாவலன் வள்ளியப்பன் பார்.

1215 கன்னற் கவியால் கவிக்கிசைந்த சித்திரத்தால்
தன்னிகரில் இந்நூலைத் தந்தனனே - மன்னு தமிழ்ப்
பள்ளிச் சிறுவரொடு பண்டிதரும் பாராட்ட
வள்ளியப்பன் உள்ளம் மகிழ்ந்து.

1216 பன்னிருகை வேலா! பழனிக் குமரா! நின்
பொன்னடிகள் போற்றிப் புகழ்கின்றேன் - மன்னுபுகழ்ச்
செந்தமிழ் நாட்டில் சிறந்த 'மலரு முள்ளம்'
சந்ததம் வாழவரம் தா.

212. கம்பர் தரும் இராமாயணம்
1217 கம்பன் கவியின் கனியமுதம் ஊட்டி நம்மை
அம்புவியில் தேவராய் ஆக்கிடுவோன் - நம்பெரியன்
செந்தமிழ்ச் செல்வன் சிதம்பர நாதநண்பன்
சந்ததம் வாழ்க, தழைத்து!

1218 பாடிப் படித்தமுதம் பாவில் வடித்தெடுத்து
நாடி நமக்குதவும் நல்லறிஞன் - நீடுபுகழ்
செய் குணசீலன் சிதம்பர நாதவள்ளல்
வையமிசை வாழ்க, மகிழ்ந்து!

1219 பாவில் சுவை அறிந்து பாவலரைப் பாரறிய
ஆவலொடு போற்றும் அருளாளன் - மேவுமன்பர்
சித்தம் மறவாச் சிதம்பர நாதவள்ளல்
நித்தமும் வாழ்க, நிலத்து!