பக்கம் எண் :

202கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1231 சொல்லால் பொருளால் தொடையால் வருமின்பம்
எல்லாம் ஒருங்குநமக் கீயுமே - நல்லார்வாய்
ஆர்ந்த புகழ்சேர் அசலாம் பிகைதந்த
காந்தி புராணமிது காண்.

1232 அன்னைதமிழ் நங்கை அலைகொண்ட செல்வநங்கை
மன்னியதென் றுள்ளம் மகிழ்ந்தனளால் - இன்னமுதம்
ஆர்ந்த கவியில் அசலாம் பிகைதந்த
காந்தி புராணமிதைக் கண்டு.

1233 கல்லாரும் பன்னூல்கள் கற்றபெரும் பண்டிதரும்
எல்லாரும் இன்பமிக எய்துவரே - நல்லார்சொல்
ஆர்த்தகலைச்செல்வி அசலாம் பிகைசொன்ன
காந்தி புராணமிதைக் கற்று.

1234 தாரணியை முற்றுமே தண்ணருளால் வென்ற
வீரனது மாட்சி விளக்குநூல் - பேரழகு
வாய்ந்த கவிகள் மலர்ந்து மணங்கமழும்
காந்தி புராணமிது காண்.

வேறு

1235 மூல நூல்கள் ஆராய்ந்து
     முற்றி முதிர்ந்த அறிவாலே
பாலும் தேனும் கலந்தொழுகு
     பாவில் அசலாம் பிகைதேவி
ஞாலத் தெவரும் பாராட்ட
     நவின்ற காந்தி புராணமிது
ஆல நீழல் எம்பெருமான்
     அருளால் வாழ்க வாழ்கவே!

1236 உள்ளம் உருகச் செவிகுளிர
     ஓதும் நாவில் அமுதூற
தெள்ளத் தெளிந்த செந்தமிழில்
     தேவி அசலாம் பிகைசொன்ன
வள்ளல் காந்தி வாழ்வாங்கு
     வாழ்ந்த வாழ்க்கைப் புராணமிது
வெள்ளம் தாழும் விரிசடைய
     விமலன் அருளால் வாழ்கவே!