பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு207

Untitled Document
231. ஒளவையார் நாடகம்
1250 மந்திரமோ? தந்திரமோ? மாயமோ? சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஒளவையை
இன்றுகண்ட காட்சி இது.

1251 நாடும்இசையால் நடிப்பால் அரங்கமைப்பால்
பீடுபெறு செந்தமிழ்ப் பேச்சழகால் - நீடுலகில்
எவ்வெவரும் கண்டுமகிழ்ந் தின்புறுதற் கேற்றதிந்த
ஒளவைவரு நாடகமே யாம்.

1252 பண்டிதரும் பாமரருள் பாலர் முதியோரும்
பெண்டுகளும் ஒக்கலையில் பிள்ளைகளும் - கண்டுகண்டு
சித்தம் மகிழச் சிறந்துதமிழ் நாடகங்கள்
நித்தம் வளர்க, நிலத்து!

232. குடியரசு வாழ்த்து
1253 ஆதிபகவன் அறவாழி அந்தணன்
யாதும் உவமையிலான் இன்னருளால் - ஓதுபுகழ்
இந்திய நாட்டில் எழுந்த குடியரசு
சந்ததம் வாழ்க தழைத்து.

1254 விண்ணவரும் கண்டு வியப்பரே; - மெச்சிநிதம்
மண்ணவரும் போற்றி மகிழ்வரே - புண்ணியஞ்சேர்
இந்திய நாட்டில் எழுந்த குடியரசுக்கு
எந்தஅரசு ஈடாகும் என்று.

வேறு
1255 எத்திசையும் புகழ்வளர விரோதி ஆண்டில்
     எழுந்திடுதை பதின்மூன்றில் குருவா ரத்தில்
புத்தியினால் அனுபவத்தால் புலமை தன்னால்
     போற்றரிய சேவையினால் புகழ்பெற்றோர்கள்
சித்தமகிழ் புதுடெல்லி நகரில் கூடி
     தேர்ந்தகுடி யரசுலகில் சிறந்து வாழ,
பத்தருக்குத் துணைபுரியும் பரந்தாமா! நின்
     பாதமலர் போற்றிநிதம் பணிகின்றோமே.