பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு215

Untitled Document
1286 புத்த முனியும் புனிதன் அரிச் சந்திரனும்
உத்தமன் ஏசுவும் ஒன்றானோன் - மெய்த்தவத் தோர்
வந்தனைசெய் காந்திமகான் வாய்மலரும் பொன்மொழியை
எந்தநாள் கேட்போம் இனி?

1287 சத்தியத்தால் மன்அரிச் சந்திரனைத் தண்ணருளால்
புத்தபெரு மானையொத்த புண்ணியனை - உத்தமனாம்
அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு
சிந்தனைசெய் நெஞ்சே தினம்.

வேறு

1288 போரின் வெறியால் உலகமெலாம்
     புரண்டு மறியும் இந்நாளில்
நேரும் சீரும் தரும்நீதி
     நெறியீ தென்று காட்டிட, நம்
பார தத்தாய் செய்ததவப்
     பயனாய் வந்த காந்திமகான்,
மார்பில் குண்டு பட்டிறந்தான்
     மண்ணில் அறமும் மடிந்ததுவோ?

1289 மெய்யும் அருளும் துணையாக
     வெற்றி காணும் ஜெகவீரன்,
செய்யும் தொழில்கள் உலகத்தின்
     சேமங் கருதிச் செய்பெரியோன்,
ஐயன் ராமன் திருநாமம்
     அன்பு பெருகக் கனிந்தோதி
வெய்ய குண்டு பட்டிறந்தான்
     விதியே? நீ இதுவேயோ?

1290 என்னைச் சுடுகின் றவன்மீதும்
     இரக்கங்கொண்டு முகமலர்ந்து
மன்னித் துயிரை விடுவனென்ற
     வார்த்தை முற்றும் பலித்ததையா!
உன்னை யொத்த அருளாளர்
     உலகில் வேறு கேட்டறியோம்!
அன்னை பாதத் தேவிதரும்
     அருமைக் காந்தி மாமணியே!