பக்கம் எண் :

28கவிமணியின் கவிதைகள்

Untitled Document
141.   இந்திர சாலமெல்லாம் - கவியில்
     இயற்றிக் காட்டிடு வோன்;
மந்திரச் சொல்லாலே - உள்ளம்
     மயங்கச் செய்திடு வோன்.

142.   உலக உண்மைகளை - எவரும்
     உணரக் கூறிடு வோன்;
அலகி லாக்கலைகள் - உறையும்
     ஆலய மாகிடு வோன்.

143.   பண்டைத் தமிழ்மொழியைப் - படித்துப்
     பக்குவம் செய்துவைத் தோன்;
கண்டின் சுவையெல்லாம் - சொல்லில்
     கனியக் காட்டிடு வோன்.

144.   எவரும் போற்றிடவே - தமிழில்
     இராம கதைபுனைந் தோன்;
புவனம் உள்ளளவும் - அழியாப்
     புகழ் பரந்திடு வோன்.

145.   விருத்துப் பாவினிலே - கருத்தை
     விளங்கச் செய்தளித் தோன்;
திருத்தம் பெற்றநடை - தமிழில்
     தெரியக் காட்டிநின் றோன்.

146.   அணி யணியாக - அணிகள்
     அடுக்கி வைத்திடு வான்;
மணி மணியான - பொருள்கள்
     வாரி வழங்கிடு வான்.

147.   பண்ணுக் கிசைவாக - விருத்தம்
     பாடி அளித்திடு வான்;
எண்ணும் கருத்துடனே - சந்தம்
     இசையச் செய்திடு வான்.

148. தீது நன்மையெல்லாம் - ஆய்ந்து
     தெளியச் சொல்லிடு வான்;
வாதி பிரதிகளின் - வழக்கை
     வரைந்து காட்டிடுவான்.