பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு31

Untitled Document
வேறு
162. உள்ளக் கருத்தையெலாம் உள்ளபடி யானிந்த
வெள்ளைக் கவியில் விளம்பினேன்-தெள்ளுதமிழ்
வெண்பாப் புலியும் விகடகவியுமெனக்
கண்பார்த்துக் காத்தல் கடன்.

வேறு
163. பாட்டுக் கொருபுலவன் பாரதி, அடா!-அவன்
     பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான்,அடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா!-அந்தக்
     கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய்,அடா!
164. சொல்லுக்குச் செல்லழகும் ஏறுமே, அடா!-கவி
     துள்ளும் மறியைப் போலே, துள்ளும் அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!-பசுங்
     கன்றும்பால் உண்டிடாது கேட்குமே, அடா!
165. குயிலும் கிளியும்பாட்டில் கூவுமே, அடா! - மயில்
     குதித்துக் குதித்துநடம் ஆடமே, அடா!
வெயிலும் மழையுமதில் தோன்றுமே, அடா! - மலர்
     விரிந்து விரிந்துமணம் வீசுமே, அடா!
166. அலைமேலே அலைவந்து மோதுமே, அடா!-அலை
     அழகான முத்தையள்ளிக் கொட்டுமே, அடா!
மலைமேலே மலைவளர்ந் தோங்குமே, அடா!
     வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே, அடா!
167. விண்ணிலொளிரு மீன்கள் மின்னுமே, அடா! - விண்ணில்
     விளங்கும் மதிநிலவு வீசுமே, அடா!
கண்ணுக் கினியசோலை காணுமே, அடா! - அதில்
     களித்திள மான்கள்விளை யாடுமே, அடா!
168. தேனும் தினையும்பாவில் உண்ணலாம், அடா! - மிகத்
     தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா!
கானக் குழலிசையும் கேட்கலாம், அடா!-ஊடே
     களிவண்டு பாடுவதும்கேட்கலாம்,அடா!