Untitled Document மண்டபம் அதனில் மகிழ்ச்சி தரும்ஓர் காட்சி காணக் கருதினன் மன்னன், அதனால், இந்நாட் டுள்ள எழில்மிகு கன்னியர் அனைவரும் நாளை அரண்மனைக்கு ஏகுமின், அழகிய கன்னியர்க்கு அரசிளங் குமரன் பரிசுகள் பற்பல பரிவொடு வழங்குவன்; வனப்பில் மிக்க மங்கையர் மணிஇப் பாரெல்லாம் புகழும் பரிசினைப் பெறுவள்; ஈதுஎம் இறைவன் இட்ட கட்டளை" என்று மன்னவன் ஏவலர் ஒருநாள் பட்டண மெங்கும் பறைகள் சாற்றினர், அதுகேட்டு, அந்நக ரத்துள அழகிய கன்னியர் வைகறை எழுந்து மஞ்சனம் ஆடி ஆடை அணிகள் அழகாய் அணிந்து கூந்தல் வாரிக் கொண்டை முடித்து மல்லிகை முல்லை மாலை சூடி வடிவேல் விழிக்கு மையும் இட்டுத் திருந்திய நெற்றியில் திலகமும் தொட்டுச் சிற்றடி சிறந்திடச் செம்பஞ்சும் ஊட்டி மணவறை ஏறும் மங்கையர் போல மன்னவன் கோயில்முன் வந்து கூடினர். அந்நாள், பொற்சிங் காதனம் பொலிவுற அமர்ந்த அரசிளங் குமரனை அஞ்சன விழிகள் நிமிர்ந்து நோக்காது நிலத்தையே நோக்க, வரிசையாய் மங்கையர் வந்து வந்து, பரிசுகள் பெற்றுப் பணிந்துசெல் காட்சி, யாவரும் நோக்கி இன்புறற்கு உரியதாம். வந்த கண்ட மங்கையர் உள்ளம்ஓர் நிலையில் நில்லாது அலையச் செய்தது திருவளர் செல்வன் திருமுகப் பொலிவோ! | |
|
|