பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு327

Untitled Document
  அழுது புலம்பி அரற்றும் புவியே!
மகிழ்து நீயும்உன் மக்களுக்கு வாழ,
என்குடி என்கிளை என்வாழ்வு என்சுகம்
என்இளம் பருவம் என்சிங் காதனம்
யான்வாழ் அரண்மனையாவும் வெறுத்தேன.
வெறுத்தற் கரிய விண்ணமு தே! என்
அன்பின் உருவே! அசோதரை நங்காய்!
உன்னையும்,
மறந்து செல்ல மனந்துணி கின்றேன்;
ஆயினும்,
நீள்நிலம் உய்ந்திட நீயும் உய்குவை;
காரிகை யேநம் காதலில் மலர்ந்த
மலரென உன்தன் வயிற்றினில் வளரும்
மகவினைக் கண்டு வாழ்த்துதற் குரிய
காலம் வரும்வரை காத்து நிற்போனல்,
மனத்தில்
கொண்ட உறுதி குலைந்து போய்விடும்.
உண்மை ஞானம்இவ் வுலகெலாம் ஒளிரச்
செய்வதென் கடனாம், சிறிது காலம்
பிரிகின் றேன், இதில் பிழையெதும் இல்லை,
வாய்த்த மனைவியே! வயிற்று மகவே!
தந்தையே! தமரே! தரணி மாந்தரே!
பொறுத்திட வேண்டும்; பொறுத்திட வேண்டும்.
பொறுத்துக் கொள்வது புண்ணிய மாகும்
உள்ளம் தேறினேன்; உறுதியும் கொண்டேன்.
இனியொரு கணமும் இங்குத் தங்கிடேன்.
யாதுந் தடையிலை; இறங்கிச் செல்வேன்.
நீள்நில மீது நித்தியா னந்த
வாழ்வை யடையும் வழிஇது வென்ற
தீவிர மான தியாகத் தாலும்
ஓய்வில் லாத உழைப்பி னாலும்
அறியலா மென்னில் அறிந்து வருவேன்;
வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்
அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்"
நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.
81