பக்கம் எண் :

330கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1537 "இடர் வரும்போதும் - உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன் பிறந்தவர்போல் - மாந்தர்
உறவு கொள்வார், அப்பா!
93
1538 ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்,
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவ துண்டோ அப்பா?
94
1539 எவர் உடம்பினிலும் - சிவப்பே
இரத்தம் நிறமப்பா!
எவர்விழி நீர்க்கும் - உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா!
95
1540 நெற்றியில் நீறும் - மார்பில்
நீண்ட பூணுலும்
பெற்றுஇவ் உலகுதனில் - எவரும்
பிறந்த துண்டோ அப்பா!
96
1541 பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டாம், அப்பா!
97
1542 நன்மை செய்பவரே - உலகம்
நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே - அண்டித்
தீண்ட ஒண்ணாதார்."
98
1543 நிலத்துயர் ஞானி - இவை
நிகழ்த்தி, "என் தம்பீ
கலத்தனிலே கொஞ்சம் - பாலைக்
கறந்து தா" என்றான்.
99
1544 ஆயர் சிறுவனும் - கலத்தில்
அளிக்க வாங்கியுண்டு,
தாயினும் இனியன் - கொண்ட
தளர்ச்சி நீங்கினனே.
100