பக்கம் எண் :

344கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  வைத்து நின்று வணங்குவேன்’ என்றொரு
நேர்த்திக் கடனும் நேர்த்தி ருந்தனள்.
அப்பால்,
திருவரு ளாலொரு செல்வக் குமரனைப்
பெண்மணி யவளும் பெற்றனள்; பெற்று
மூன்று மாதம் முற்றிய பின்னர், ஒருகை,
மைந்தனை யேந்தி மார்போடு அணைக்க,
ஒருகை,
தேவினுக் குரிய தீஞ்சுவை யமுது
தாங்கயி கலத்தைத் தாங்க, ஒருநாள்
அடவியில் அமைந்த ஆலயம் நோக்கி
அன்ன மெனஇவள் அசைந்து சென்றனள்.
அசைந்து செலவே, அந்நாட் காலையில்
தூர்த்து மெழுகித் துப்புர வாக்கி
மரத்தின் அடியில் மஞ்சள் பூசி
மங்கல நூலை வரிவரி யாக
வரிந்து சுற்றி வைத்திட ஏகிய
செல்வி இராதை, திரும்பி வந்து
காணாக் காட்சி கண்டவளாகி,
‘அதிசயம், அதிசயம், அம்மா அதிசயம்!
மலர்கள் மலர்ந்து மழையெனப் பொழியும்
மரத்தின் அடியில் மௌன மெய்தி,
சோதி மண்டலம் சூழ்ந்து பொலிய
முழங்கை மடக்கி முட்டில் அமர்த்தி
வனத்தில் வாழும் மாபெருந் தெய்வம்
அருள்வடி வாகி அமர்வது பாராய்!
சாந்தம் உருவாய்த் தழைப்பது காணாய்!
விரிதா மரையை வென்ற விழிகளில்
தெய்வத் தன்மை திகழ்வது நோக்காய்!
பாக்கியம், பாக்கியம், பாக்கியம் அம்மா!
கண்ணிற் காணாக் கடவுளை இந்த
மண்ணிற் கண்டு வணங்கப் பெறுதலே!”
என்று பலவும் இயம்பி நன்றனள்?