Untitled Document | | மனித வாழ்வு வாழ்வதன் காரணம், அன்னையே நின்னை அறிந்தவர் எவரும் இன்ன தாமென எளிதின் அறிகுவர். இல்லறச் சகடம் இனிது நடாத்தக் கருவியும் ஈதெனக் கண்டு கொள்வர். சந்ததம் நின்னுளம் சாந்தி யடைய! வாழ்க வாழ்க வளர்ந்துநீ வாழ்க! வாழ்நா ளெல்லாம் மகிழ்வொடு வாழ்க! நின்விருப் பெல்லாம் நீபெறு வதுபோல் என்விருப் பெல்லாம் யானும் பெறுக! கடவுள் என்றுநீ கருதிய மனிதன் எளிதின் இதனை எய்திடு மாறு மாதே! நீயும் வாழ்த்திடு வாய்”என வேண்டி நின்றனன் வேண்டுதல் கேட்டவன் மதலையின் மீதுகண் வைத்த வண்ணமே, ‘சிந்தையில் எண்ணம் சித்தி யாகுக’ என்று வாழ்த்தினள் ஏந்திய மதலை (அறச்சிறு மதலைகள் அறிஞரும் அறியொணா அரிய உண்மைகள் அறிந்திடும் என்பர்) கடவுள் முனிவனைக் கண்டுதன் கரங்களை நீட்டிய அதிசயம் நினைத்தற்கு அரியதாம்! ஐயனும், உண்ட உணவால் உடல்வலி வுற்றுச் சிந்தை முற்றும் தெளிந்தவ னாகி, வாடா மலர்கள் மலர்ந்து சொரியும் போதி விருட்சம் பொலிபூங் காவினை நாடிச் சென்றனன் ஞானம் பெறவே. | | |
|
|