பக்கம் எண் :

354கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு
1632 “அத்திமரம் ஓங்கியெழும் அருஞ்சோலை யதனில்
அயலொருவர் துணையின்றி அடியாளும் அன்பாய்ப்
புத்திரனைப் போற்றிவரும் பொறுமையினைக் கண்டு
புண்ணியநீ கொண்டபரிவு அளவுண்டோ ஐயா?
189
1633 தலைநாளில் நீகண்ட சிறுமகனும் இன்று
தள்ளாடும் உயிரோடு கிடக்கின்றான் ஐயா!
தொலையாத கொடும்பாவி யானும்இனி இந்தத்
தொல்லுலகில் வாழ்வதிலோர் பயனுண்டோ ஐயா?
190
1634 சிரித்தமுகம் எனமலர்ந்து செழித்தசெடி நடுவே
சிறுமகனும் விளையாடித் திரிந்திடும்அவ் வேளை
விரித்தபட மெடுத் தரவொன்று அடுத்தொருகை பற்றி
விளங்குமணிக் கடகமென விளைந்து கிடந்ததுவே.
191
1635 பால்மணம் மாறாதசிறு பாலகனும் அறியான்
படஅரவை விளையாட்டுப் பண்டமெனக் கொண்டான்;
வாலினையும் தலையினையும் வயிற்றினையும் வலித்து
வருத்தமெழச் சிறுகுறும்பு செய்துவிட்டான், ஐயா!
192
1636 சிறுபொழுது சென்றிடஎன செல்வமகன் உடலில்
சீதமிகப் பரந்துணர்வு தீர்ந்துவிட்ட தையா!
நிறுத்தவிழி ஒருநிலையில் நின்றுவிட்ட தையா!
நீட்டியகால் மடங்காது நிமிர்ந்துவிட்ட தையா!
193
1637 விடமேறி மடிந்ததென விளம்புகின்றார் சிலரே;
விதியாலே விளைந்ததென விரிக்கின்றனர் சிலரே.
தடையில்லை இதுமூடு சன்னியென்றார் சிலரே,
சஞ்சீவி அளித்தாலும் சாமென்றார் சிலரே.
194
1638 வயித்தியரைக் கண்டிந்த வரலாறு சொல்லி,
‘மயக்கமிது நீங்கஒரு மருந்திலையோ?’ என்றேன்!
‘பயித்தியமோ இனியே தும்பயனில்லை, என்றார்.
‘பட்டமரம் தளர்த்திடுமோ பாரிடத்தில்’ என்றார்.
195
1639 அன்பாக அரவிட்ட சிறுமுத்தல் அதனால்
ஆவிக்கும் இடையூறுண் டாமோஎன் ஐயா!
வன்பாரில் மகவிழந்து வாழ்வேனோ ஐயா!
மலையேறிக் குதித்துயிரை மாய்ப்பேனே ஐயா!
196