பக்கம் எண் :

364கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1682 யானும் நீயும் இறந்தபினும்,
     இராஜா ராஜன் பட்டபினும்,
ஊனம் இன்றி இவ்வுலகம்
     ஊழி ஊழி நின்றிடுமால்;
கூனக் கிழவி ஒருசிறுகல்
     குனிந்து வீசி எறியில், அதை
மானக் கடலும் மந்தரமா
     மலையென் றெண்ணி மலைந்திடுமோ?
13

1683 கொற்ற மன்னர் முடிசூடிக்
     கொலுவில் அமர்ந்த திருக்கோயில்,
முற்றுங் கூகை ஆந்தையொடு
     முதுபேய் வாழும் காடாமோ;
வெற்றி வில்லை ஏந்திமுனம்
     வேட்டை செய்த வேடன்கை
பற்றி நரிகள் இழுப்பதையும்
     பாரில் கண்ணாற் பார்ப்போமே.
14

1684 மன்னர் பட்ட படுகளத்தில்
     மலரும் ரோஜா மலரைப்போல்,
வன்ன ரோஜா மலர்வேறு
     வனத்தி லெங்கும் வளர்வதுண்டோ?
புன்னைக் கிளைகள் எழுந்தோங்கிப்
     பூத்துச் சொரியும் புனிதநிலம்,
கன்னி யொருத்தி முத்தாரம்
     கழன்று வீழ்ந்த இடமலவோ?
15

1685 இருந்து சென்ற முன்னோரின்
     இடத்தி லெல்லாம் யாம் இன்று
விருந்து செய்து வாழ்கின்றோம்;
     விகடம் சொல்லி மகிழ்கின்றோம்;
இருந்த இடம்விட்டு யாமும் இனி
     எழுந்து சென்றால் இங்கிருந்து
விருந்து செய்வார் யார்யாரோ?
     விகடம் சொல்வார் யார்யாரோ?
16