பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு363

Untitled Document
1678 வாராய் நண்பா! வருத்தமெனும்
     வாடைக் காலப் போர்வையினை,
நேரா வருமிவ் வசந்தமெனும்
     நெருப்பில் வீசி எறிவாயே
தேரா வாழ்வின் பறவை, இனும்
     செல்லுந் தூரம் சிறிதேயாம்;
பாராய்! பாராய்! பறவை, அதோ
     பறக்கச் சிறகும் விரித்ததடா!
9

1679 ஒழிந்த பாழில் ஒருகணமாம்;
     உயிர்வாழ் உலகில் ஒருகணமாம்;
வழிந்து விண்ணில் மீன்களெல்லாம்
     மங்கி மங்கி மறைந்தனவே.
அழிந்த பாழின் உதயம்கண்டு
     அறியச் செல்வோர் அனைவருமே
எழுந்து நின்றார் கண்டிலையோ?
     எழுவாய்! எழுவாய்! எழுவாயே!
10

1680 வாரி வாரிக் கொடுத்தவரும்
     வழங்கி டாது வைத்தவரும்
பாரில் மண்ணாய்ப் போனதலால்,
     பசும்பொன் னானது அறியோமோ!
ஊரில் அவர்தம் உடலையெடுத்து
     உரையும் நிறையும் காணாரே;
ஓரும் உள்ளத் துண்மையிதை
     ஊன்றி நோக்கி உணர்வாயே.
11

1681 வையம் பழைய அரண்மனையாம்;
     வாயில் இரவு பகலேயாம்;
மெய்யின் இங்குக் கொலுவிருந்து
     விதித்த காலம் அரசாண்டு,
செய்ய மணிமா முடிவீழச்
     சென்ற மன்னர் எண்ணிலரால்;
ஐய! இதனை உள்ளத்தில்
     ஆழ்ந்து காணல் அறிவாமே.
12