பக்கம் எண் :

366கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1690 அன்றென் இளமைப் பருவத்தில்
     அறிவிற் சிறந்த புலவரையும்
நன்று சீல முடையபெரு
     ஞானி களையும் அடிபணிந்து
நின்று கேட்ட வாதங்கள்
     நினைப்பின் அரிய ஆயிடினும்,
சென்ற வாயில் வழியேதான்
     திரும்பி அந்தோ! வந்தேனே.
21

1691 அரிய பெரிய ஞானிகளோடு
     அறிவின் விதைகள் விதைத்துவந்தேன்;
பெருகி ஞானம் வளர்ந்தோங்கப்
     பேணிப் பணிகள் பலசெய்தேன்;
உரிய காலைக் கண்டபலன்
     உண்மை கூறின் இதுவேயாம்;
வருதண் ணீரைப் போல்வந்தேன்;
     மாயக் காற்றைப் போல்மறைந்தேன்.
22

1692 ஏனோ உலகில் வந்தேன்? முன்
     இருந்த இடமும் எவ்விடமோ?
கானா றோடும் கதியேபோல்,
     கண்ட கண்ட படிபோனேன்;
வானோக் கியபாழ் நிலமீது
     வழங்கும் வாடைக் காற்றெனவே,
யானோர் காலை வெளியேறில்
     எங்கே குவனோ? அறியேனே.
23

1693 மலையில் ஏறி நிற்கின்றோம்,
     மறிந்து கடலில் வீழ்கின்றோம்;
சுலவு புயலில் அக்கப்பட்டுச்
     சுழன்று சுழன்று செல்கின்றோம்;
அலையில் நுங்கும் நுரையுமலால்
     அடைந்த பயன்வே றொன்றுமிலை.
உலகின் உண்மை இதுவல்லால்
     உரைக்க வேறொன் றுண்டோ? சொல்.
24