பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு37

Untitled Document
212 குன்றும் குகைகளுமோ? வெண்ணிலாவே! - அன்றிக்
வனக் கிழவிதானோ? வெண்ணிலாவே
213 ஆழியும்நீ வரக்கண்டு வெண்ணிலாவே! - குதித்து
ஆடுவதெக் காரணமோ? வெண்ணிலாவே!
214 ஆதாரம் ஒன்றில்லாமல் வெண்ணிலாவே! - நீயும்
அந்தரத்தில் நிற்பதேனோ? வெண்ணிலாவே!
215 சுற்றித் திரிவதும்ஏன்? வெண்ணிலாவே! - உனக்குச்
சொந்த இடம் ஒன்றிலையோ? - வெண்ணிலாவே!
216 அண்டிவாராய் நீயெனினும், வெண்ணிலாவே! - இன்னும்
அகன்றெங்கும் போய்விடாதே, வெண்ணிலாவே!
217 பறக்கச் சிறகிருந்தால், வெண்ணிலாவே! - உன்றன்
பக்கம் வந்து சேருவேனே, வெண்ணிலாவே!
218 பால்போல் நிலவெறிக்கும் வெண்ணிலாவே; - என்றன்
பாங்கில்விளை யாடவாராய்! வெண்ணிலாவே!
219 பாங்கில்விளை யாடவந்தால், வெண்ணிலாவே! - நல்ல
பால்தருவேன், பழந்தருவேன், வெண்ணிலாவே!
220 துன்பமிக்கத் தாமடைந்தும், வெண்ணிலாவே! - பிறர்க்குச்
சுகமளிப்பார் உன்போலுண்டோ? வெண்ணிலாவே!
221 இருளதனை விழுங்கவல்ல வெண்ணிலாவே! - உன்னை
இருள்விழுங்கும் சூழ்ச்சியெதோ? வெண்ணிலாவே!

34. மலர்கள்
222 பூமகளின் புன்னகைபோல்
     பூத்திடு வோமே! - கம்பன்
பாமணக்குந் தமிழினைப்போல்
     பரிமளிப்போமே!

223 வண்ணவண்ணச் சேலைகட்டி
     மகிழ்ந்திருப் போமே! - இந்த
மண்ணகமும் விண்ணகமாய்
     மாறச் செய்வோமே!