பக்கம் எண் :

36கவிமணியின் கவிதைகள்

Untitled Document
200 இரவைப் பகலாயியற்றுதம்மா வெப்பம்
   இல்லா திளைப்பெல்லாம் ஓட்டுதம்மா
அரவம் விழுங்கினும் அஞ்சாதம்மா எங்கள்
   ஆண்டவன்சூடும்மணியே அம்மா
201 பொன்மரம் காய்த்த கனியிதுவோ?இந்தப்
   பூமகள் ஆடும் கழங்கிதுவோ
கன்மன முங்களி கொள்ளக் கவினொளி
   காட்டி விளங்கும் மதியிதுவோ
202 கண்ணுதல் உள்ளக் கருணையதோ?கொற்கைக்
   காவலர் கண்ட புகழதுவோ
மண்ணகஞ் செய்திடு புண்ணியமோ?இன்று
   வானகம் வந்து நிலவுதம்மா
33. வெண்ணிலா
203   மீன்கள்கொடி கோடிசூழ வெண்ணிலாவே ஒரு
வெள்ளியோடம் போலவரும் வெண்ணிலாவே
204 பானுவெங் கதிர்குளிக்கும் வெண்ணிலாவே!நித்தம்
பாற்கடலும் ஆடுவையோ?வெண்ணிலாவே
205 ஆம்பல்களி கூரவரும் வெண்ணிலாவே!உனக்கு
அம்புயம்செய் தீங்கெதுவோ?வெண்ணிலாவே
206 இரவையும்நண் பகலாக்கும் வெண்ணிலாவே உன்னை
இராகுவும் விழுங்கிடுமோ?வெண்ணிலாவே
207 வளர்ந்து வளர்ந்துவந்த வெண்ணிலாவே!மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ?வெண்ணிலாவே
208 கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே!பகல்
கூட்டினில் உறங்குவாயோ?வெண்ணிலாவே
209 பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே நீயும்
பாரில்வர அஞ்சினையோ?வெண்ணிலாவே
210 பளிங்குபோலும் உன்னுருவில் வெண்ணிலாவே கறை
பற்றியே இருப்பதேனோ வெண்ணிலாவே
211 பூமியின் உருநிழலோ?வெண்ணிலாவே அது
போகாக் குறுமுயலோ?வெண்ணிலாவே