பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு371

Untitled Document
1710 வசந்த ருதுவும் வந்திடுமோ?
     வாச மலர்கள் பூத்திடுமோ?
கசிந்து பாடும் குயில்இன்னும்
     காது குளிரச் செய்திடுமோ?
இசைந்த இளமைப் பருவத்தின்
     இனிமை இனியும் எய்துவனோ?
அசைந்த உள்ளம் தேறுமொழி
     ஆரே கூற வல்லாரே?
41

1711 இருளின் வாயிற் படிதாண்டி
     எமக்கு முன்னே சென்றவர்கள்
கருது கோடி கோடியின் மேல்
     கணக்கில் லாதார் ஆயிடினும்
ஒருவரேனும் வழியிது வென்று
     உண்மை கூற வந்தனரோ?
அறிய வழியை நாமும் இனி
     அளந்து காண வேண்டுமடா!
42

1712 நெஞ்சே! நீயும் எத்தனைநாள்
     நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்?
வஞ்ச உலகில் மற்றெவையும்
     மறந்து நீக்கி யறவிட்டுத்
தஞ்ச மாக நட்பொன்றும்,
     தழைக்கும் ரோஜா வனமொன்றும்,
விஞ்ச மதுவுண் கலமொன்றும்,
     விரும்பி வேண்டிப் பெறுவாயே.
43

1713 அன்பே! யானும் நீயும் இசைந்து
     அயலில் எவரும் அறியாமல்
வன்பே உருவாம் விதியினையும்
     வளைத்துள் ளாக்கி முயல்வோமேல்,
துன்பே தொடரும் இவ்வுலகைத்
     துண்டு துண்டாய் உடைத்துப்பின்
இன்பே பெருகி வளர்ந்திடுமோர்
     இடமாய்ச் செய்ய இயலாதோ?
44