பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு49

Untitled Document
311   மாங்கனியும், நல்ல
     வருக்கைப் பலாக்கனியும்,
வாங்கியுன் அம்மான்
     வருவார்; அழவேண்டாம்!

312   கண்ணுறங்கு, கண்ணுறங்கு;
     கண்மணியே! கண்ணுறங்கு;
ஆராரோ ஆராரோ?
     ஆரிவரோ? ஆராரோ?

45. அரசே எழுந்திரு

313   அப்பா எழுந்திரையா!
     அரசே எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று
     கோழி அதோ கூவுது பார்!

314   கா கா கா என்று
     காகம் பறக்குது பார்!
கிழக்கு வெளுக்குது பார்!
     கிரணம் பரவுது பார்!

315   பூ மலர்ந்த ரோஜா
     புதிய மணம் வீசுது பார்!
வந்து வந்து வண்டு
     வட்டம் சுழலுது பார்!

316   கறவைப் பசுவை அதன்
     கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
     பழம் தின்ன வேண்டாமோ?

317   பாடங்க ளெல்லாம்
     படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
     சென்றிட வேண்டாமோ?

318 காலையும் ஆச்சுதையா!
     கண்விழித்துப்பாரையா!
அப்பா எழுந்திரையா!
     அரசே எழுந்திரையா!