கவிதையைப்படித்த அளவிலே நம் மனத்திலே விவரிக்க முடியாத ஓர் இன்பம் உண்டாகி விடுகிறது என்கிறார்கள். இந்நூலில் முதலாவதாய் அமைந்துள்ள‘காதல் பிறந்த கதை’ இத் தகுதி வாய்ந்த உண்மைக் கவிதையாகும். இதை நின்று புகழ்ந்துவிட்டுப் பின் இதைக் கற்று நுகர்வோம் என்று நாம் எண்ண முடியாது. கவிபாரதி, நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ? பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள் பன்னியுபசரணை பண்ணுவதுண்டோ? நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே - விண்ணை நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ? மூட்டம் விறகிணையச் சோதி கவ்வுங்கால் - அவை முன்னுபசாரவகை மொழிந்திடுமோ? | என்று பாடுகின்றார். இதுபோலத்தான் நாமும் உண்மைக் கவிதை யனுபவத்தில் விரைந்து மூழ்கித் திளைக்கின்றோம். இது போன்ற கவிதையை ஒரு முறை நுகர்ந்து இன்புற்றதோடு தமது மனம் முற்றும் திருப்தியடைந்து விடுவதில்லை. மீண்டும் மீண்டும் அதனை நுகர வேண்டும் என்னும் அவா நம் மனத்தில் வேரூன்றி விடுகிறது. நுகர நுகரத் தெவிட்டுவதில்லை. என்றும் மாறாத இளமைத் தன்மையோடு நின்று நம் மனத்தைக் கவர்கின்றது. இவ் இயல்பினையும் கவிஞரும் ஆராய்ச்சியாளருமாகிய ஓர் மேல் நாட்டு ஆசிரியர் வற்புறுத்தியிருக்கிறார். தே.வி.யின் கவிதைகளிற் பல இவ் இயல்புடையன என்பது தமிழ்மக்கள் நன்கு அறிந்ததே. இவ் வகைக் கவிதைகள் தோன்றும் முறையைக் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முகமாய்ப் பேசுகிறார்கள். உண்மையுள்ளத்தின் அடி நிலத்திலிருந்துதான் உண்மைக் கவிதைகள் தோன்றும். எவ்வாறு உண்மையுள்ளத்தை அறிவது? பாரதியின் கவிதை யொன்று ஞாபகத்தில் தோன்றுகிறது. சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல் - பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை | |