பக்கம் எண் :

56கவிமணியின் கவிதைகள்

Untitled Document
53. பசு

367   பச்சைப்புல்லைத் தின்று வெள்ளைப்
     பால்தரநீ என்ன
பக்குவஞ் செய்வாய்? அதனைப்
     பகருவையோ? பசுவே!
உச்சியுடல் நக்கி, ஈன்ற
     உடனுனது கன்றை,
உயிரெழுப்பும் மாயம் எதோ?
     உரைத்திடுவாய், பசுவே!

368   வாய்க்கினிய பால்தருவாய்;
     வயற்குர மும்தருவாய்
வண்டிக்கட்டக் காளையும் நீ
     வளர்த்தளிப்பாய், பசுவே!
தாயில்லாப் பிள்ளைகட்குத்
     தாயாவாய்; நோயால்
தளர்பவர்க்கு மருத்துவச்சி
     தானாவாய், பசுவே!

54. பால்

369   அம்மா பாலைக் கறந்திடுவாள்,
பாலைக் காய்ச்சி ஆறவைப்பாள்;
ஆறின பாலில் உறைவிடுவாள்,
உறைவிட்ட பால் தயிராகும்;
தயிரைக் கடைந்தால் மோராகும்,
மோரில் வெண்ணெய் படர்ந்துவரும்;
வெண்ணையை உருக்கினால் நெய்யாகும்,
நெய்யில் அப்பம் சுட்டிடலாம்;
நீயும் நானும் தின்றிடலாம்.

55. பசுவும் கன்றும்

370   தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே
     துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.

371 அம்மா என்குது வெள்ளைப் பசு - உடன்
     அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி