பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு55

Untitled Document
360   பவழக் காரத் தெருவிலே
பவழங் காண வில்லையாம்;
எவர் எடுத்துச் சென்றனர்?
எனக் கறிந்து சொல்வையோ!

361   பங்கஜாட்சி கையிலே
பவழங் காண வில்லையாம்;
எங்கும் உன்னைத் தேடினார்,
எடுத்த துண்டோ தத்தம்மா?

362   அரசர் மார்பில் ஆரத்தை
ஆரோ கொண்டு போனாராம்;
திருடிச் சென்றார் எவரம்மா?
தெரியு மானாற் சொல்லம்மா!

52. கூண்டுக்கிளி
சிறுவன்
363   பாலைக் கொண்டு தருகின்றேன்,
     பழமும் தின்னத் தருகின்றேன்;
சோலைக் கோடிப் போகவழி
     சுற்றிப் பார்ப்ப தேன்கிளியே?

364   காட்டி லென்றும் இரைதேடிக்
     களைத்தி டாயோ? உனக்கிந்தக்
கூட்டில் வாழும் வாழ்வினிலே
     குறைகளேதும் உண்டோ சொல்?

கிளி
365   சிறையில் வாழும் வாழ்வுக்குச்
     சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
     எண்ணி வினைகள் செய்யானோ?

366 பாலும் எனக்குத் தேவையில்லை,
     பழமும் எனக்குத் தேவையில்லை;
சோலை எங்கும் கூவிநிதம்
     சுற்றித் திரிதல் போதுமப்பா!