பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு79

Untitled Document
தலையெடுத் தேன், அதைத் தறுகணர் கண்டு,
பிடித்தனர் வெட்டினர் பிடுங்கி எறிந்தனர்.
சாணியைக் கரைத்துத் தலையில் கொட்டினர்.
துடைப்பங் கொண்டு துரத்தி யடித்தனர்.
யாவும் சகித்தங் கிருந்தனன். என்செய்வேன்?
தளர்ச்சி யுற்றிலேன், தகும்நற் காலம்
வருமெனச் சற்று மறைந்து தங்கினேன்.
ஐவரை விடயான் அதிபல சாலியோ?
மறைந்து சின்னாள் வாழும் காலை,
ஒருதினம் வீட்டில் உள்ளார் அனைவரும்
உறவினர் இருக்கும் ஒரூர் சென்றனர்.
வெகுநா ளாகியும் மீண்டிலர், யானும்,
இதுவே தருணம் என்று நினைத்து,
விரைவில் வளர்ந்து, விரும்பிய படியெலாம்
தழைத்துச் செழித்துச் சார்விட மெங்கும்
படர்ந்து பற்றிப் பல்கிளை யாகி,
வாய்ந்தஇவ் வித்தாம் மக்களைப் பெற்று
வாழ்ந்திருக் கின்றேன். மற்றவர் வாழும்
வீட்டையும் இடித்து விடும்வலி இந்நாள்
எனக்குண் டாயினும், இழிவென விடுத்தேன்.
இணங்கி யிருப்பவர் பிணங்கிப் பிரியவும்
பிணங்கிப் பிரிந்தவர் இணங்கிக் கூடவும்
செய்வினை என்போல் செய்ய வல்ல
மந்திர வாதியிவ் வையகத் துண்டோ?
செய்பிழை யாவும் தெரிந்து பொறுத்தேன்.
பொறுத்தவர் என்றும் பூமி யாள்வார்.
எனக்குச் சொந்த மில்லா இடமெதாம்?
புல்லே யாயினும் புல்லிய குணமிலை.
அற்பர் இகழினும் அறிவால் பொறுப்பேன்.
தலையில் மதிப்பினும் தயவால் சகிப்பேன்.
முயற்சி கைவிடேன். முயற்சி கைவிடாத்
திறமுடை யோரைத் திருமகள்
பெரிதும் உவந்து பேணமுன் நிற்குமே.