Untitled Document | | 67. உத்தம ஜீவிதம் | 490 | | கருத்திலெழும் அரியஉருக் கவின் கொளநற்சிலையிற் கண்காணக் காட்டிடவே கைவருந்தி நாளும், அருத்தியொடு மெய்த்தளர்வும் அகத்தளர்வும் பாராது ஆமளவும் முயன்றிடுவர் தோமறுசிற்பியரே. |
491 | | அருமையிலும் பெருமையிலும் அழகிய தன்மையிலும் அகத்திலெழுந்த தொளிர்வடிவப் புறத்தகமைக்கச்சமைந்தே, உரிமைபெறும் ஓவியமும் உருவாக்க வல்லார் உறுதுயரும்படும்பாடும் உலகிலெவர் அறிவார்? |
492 | | பெருமைபெறு திருக்கோயில் பெட்புறவே அமைக்கும் பேராளன், அத்தளியின் பெரியசின கரங்கள் ஒருமைகொள உயர்வானம் உறுமளவும் எழவே, உயிர்வாழும் நாள்முழுதும் உதவிடினும் வருந்தான். |
493 | | இமையவரின் உலகுதனில் இருந்துவரு மருந்தாய் இதயமிதில் எழுமினிய இறும்பூதின் மயமாய் அமையவொரு கவிபாட அரியபெரும் புலவர், அடைவருத்தம் செல்காலம் அணுவேனும் மதியார். |
494 | | கல்லுருவும் பொடியாகும்; காண்படமும் மங்கும்; கண்களிக்கும் திருத்தளியும் மண்குளிக்கும் திண்ணம்; சொல்லினொரு நூறாண்டு செல்லுவதும் அரிதாம்; சொந்தமெனப் புலவர்தரு சந்தமுற கவியே. |
495 | | சீவிதத்தை விதியதனைத் திறமுறவே திருத்தும் திவ்வியநற் சீவான்ம சிற்பியரும் யாமே; மூவுலகில் எக்காலும் மூவாத பொருளில் முயற்சியொடு பயிற்சிதரும் மொய்ம்புடையோர்யாமே, |
496 | | ஆதலால் எந்நாளும் அழியாத பொருளாம் ஆன்மாவை மேம்படுத்தி, அறநெறியில் நின்று. தீதெலாம் அறவொதுக்கித் திருவருளும் பெற்றுச் சிவஞானச் செல்வரெனத் தினம் வாழுவோமே. | |
|
|