பக்கம் எண் :

92கவிமணியின் கவிதைகள்

Untitled Document
578 கண்ணில் ஒளிவிளங்கக் கண்டேன் - அந்தக்
     காட்சியின் காரணம்என்? குழந்தாய்!
விண்மீன் ஒளிசிறிது தங்கி - அங்கு
     மின்னி விளங்குகின்ற தம்மா!

579 நெஞ்சம் களிக்கவரும் குழந்தாய்! கண்ணில்
     நீர்த்துளி நின்றகதை எதுவோ?
வஞ்சப்புவியில் எனைத் தேடி - அது
     வழியெதிர் வந்துநின்ற தம்மா!

580 ஒளிரும் உன் நெற்றியிலே இந்த - மென்மை
     உண்டான தெப்படி? என் குழந்தாய்!
தளிரும் தழையச் செய்யுங் கரமொன்று - அதைத்
     தடவி அளித்ததுண்டு என் அம்மா!

581 பூவின் அழகுனது முகத்தில் - என்றும்
     பொழிந்திடும் காரணம்என்? குழந்தாய்!
தேவரும் கண்டறியாக் காட்சி - யானும்
     தெளிவுறக் கண்டபலன், அம்மா!

582 புன்னகை பூத்திடும் வேளை - ஒரு
     புதுமையும் காண்பதேனோ? குழந்தாய்!
முன்னம் அரம்பையர்கள் மூவர் - ஒன்றாய்
     முத்தம் அளித்தகுறி, அம்மா!

583 ஆசைக் குழந்தாய்! இச் செவிகள் - உன்னை
     அடைந்த வரலாறே துரையாய்?
ஈசனும் பேசிடவாய் திறந்தான் - கேட்க
     இவையும் எழுந்தன, என் அம்மா!

584 இன்பச் சிறுகரங்கள் இவைதாம் - உனக்கு
     எவ்வா றமைந்தன? என் குழந்தாய்!
அன்பு வளர்ந்திவ்வுரு வாகி - என்னை
     அண்டி அணைந்திருக்கு தம்மா!

585 ஆவி குளிரவருங் குழந்தாய்! - இந்த
     அழகிய கால்கள் எங்கே கொண்டாய்?
தேவப் பிறவிகளின் சிறகோடு - ஒரு
     சிங்காரப் பெட்டியிலே கண்டேன்.