பக்கம் எண் :

பக்கம் :116பூங்கொடி

 
  பிரிவெனும் பெருஞ்சுறா பேழ்வாய் காட்டி 70
  விரைவினில் வந்தெனை விழுங்கிடும் அந்தோ!
இசையொலி பரவிட இன்புறுங் காலை
வசையிலா யாழில் வடிநரம் பறுந்ததே!
கூடி மகிழ்ந்த கூத்தும் இசையும்
 
  வாடி வதங்கி வாழ்விழந் தனவே! 75
  பண்ணொலி இழந்தது பாடல் அந்தோ!
கண்ணொளி இழந்தது கருவிழி அந்தோ!
கொழுநன் இழந்தேன்! கொழுநன் இழந்தேன்!
உழலும் வாழ்வும் உயிரும் வேண்டேன்!'
 
  எனுமொழி புலம்பி, இனைதுயர் நலியக் 80
  கண்படை கொண்டிலள், கருதிலள் உணவைப்
புண்படு நெஞ்சம் பூண்டனள்; அதனால்
பண்ணும் இசையும் பரிவுற் றேங்கக்
கண்ணும் மனமும் கவலை தேங்க;
 
  உயிரும் உடலும் நலிந்து மெலிந்தனள்; 85
     
 

வானொலிச் செய்தியும் எழிலியின் களிப்பும்

 
     
  `ஊர்பெயர்ந் தேகிய உயர்பெருங் கூத்தன்;
சூர்வளி தாக்கத் தொலைகலப் பட்டோன்;
ஊர்திரை உந்த ஒடிமரம் துணையாக்
கல்லா மாந்தர் கடுங்கண் மறவர்
 
  பல்லோர் வாழும் பழுவூர்ப் பாக்கம் 90
  சார்ந்துளன்' என்று சாற்றிய வானொலி
வாய்மொழி கேட்டோர் வந்துடன் புகலத்
தழலில் உருகும் நெஞ்சம் தளிர்த்தனள்,
உயிரும் தளிர்த்தனள், ஊனெலாம் தளிர்த்தனள்,
 
  பயிரை விளைத்தோன் பயனெதிர் நோக்கும் 95

---------------------------------------------------------------

  பேழ்வாய் - திறந்தவாய், கண்படை - உறக்கம், சூர்வளி - புயல், ஊர்திரை - ஊரும் அலை, ஊன் - உடல்.