பக்கம் எண் :

எழிலிபாற் பயின்ற காதைபக்கம் : 121

 

17. எழிலிபாற் பயின்ற காதை

 
 

பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல்

 
     
  ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி
பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து
கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை
நெடுமனை குறுகி நின்றன ளாக
     
 

பூங்கொடி அறிமுகம்

 
     
  `வல்லான் கைபுனை ஓவியம் போலும் 5
  நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை?
இளங்கொடி யார்நீ?' என்றனள் எழிலி;
உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை
அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி;
 
     
 

எழிலி பாடம் பயிற்றல்

 
     
  இசையின் அரசி ஈங்கிவள் விழைவுணர்ந் 10
  திசைந்தனள், இசையின் இலக்கண நுணுக்கமும்,
பாடல் திறனும், பாடும் முறைமையும்,
ஏடுரை வகையும், இசைத்தொழில் புரிதலால்
பட்டுணர் அறிவும், பாங்குடன் குழைத்து
  மட்டவிழ் கோதை மனங்கொள ஓதினள்; 15
     
 

இசைக்கருவிப் பயிற்சி

 
     
  குழலும் யாழும் முழவும் முதலாப்
பழகும் கருவியின் பான்மையும் பயிற்றினள்;
மீனவன் சுவடியின் மேம்படு பொருளெலாம்
ஞானமீ தூர நாள்பல ஆய்ந்து
 
  குறைவறத் தெருட்டினள் கொடுமுடி நங்கை; 20

---------------------------------------------------------------

  போந்து - சென்று, பட்டுணர் அறிவு - அனுபவ அறிவு, மட்டவிழ் கோதை - பூங்கொடி, மீதூர - மேலும்வளர, தெருட்டினள் - தெரிவித்தனள்.