பக்கம் எண் :

எழிலிபாற் பயின்ற காதைபக்கம் : 123

 

யாப்பியல் பயில்கென எழிலி கூறல்

 
 
  நசைத்தமிழ் இசைத்திறம் நன்கறி வுறுத்திய
எழிலி மீண்டும் இளையவட் கூஉய்க்
`கழிமிகு புலமை பெற்றனை காரிகை!
பாடல் யாக்கும் பாங்கும் கசடற

 
  நாடிநீ பயிலுதல் நயந்தனென் செல்வி! 50
     
 

கவிதை குவிதல் வேண்டும்

 
     
  யாண்டும் கவிதை யாத்திட முனைவோர்
வேண்டு மளவில் விரிந்திடல் கண்டோம்;
ஆயினும் சிலரே அறிவுடைப் புலவோர்;
தாயினும் மேலாம் தமிழ்மொழி ஓங்கிட
 
  நவையறு கவிதை குவிந்திடல் வேண்டும்; 55
     
 

கல்லாக் கவிஞர்

 
     
  கவியெனும் பெயரால் கற்பனை செய்து
புனைவோர் அனைவரும் புலவோர் அல்லர்,
துணைசெயும் யாப்பும் தொட்டவர் அல்லர்,
எழுத்தும் சொல்லும் பழுத்தவர் அல்லர்,
 
  முழுக்கப் பொருளும் முடித்தவர் அல்லர், 60
  பழுதிலா அணியும் படித்தவர் அல்லர்,
ஐவகை இலக்கணம் அனைத்தும் இன்றிச்
செய்யுள் எழுதி உய்வோர் பலரே!
 
     
 

தமிழைப் பழிக்க விடுவதோ!

 
     
  இவர்தம் பாடல் எழிலுற அச்சுச்  
  சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம்; 65
  விடுத்தஇச் சுவடிகள் அடுத்திவண் வருமவர்
படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப்
பழிப்பவர் ஆவர்; பைந்தமிழ் வளர்ச்சி
இழித்துரை கூறுமா றிருந்ததே என்பர்;
 
  செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே 70