பக்கம் எண் :

பக்கம் :130பூங்கொடி

115
 
  நந்தலில் செல்வ நலத்தது வளத்தது, 95
  அந்தம் மிகுந்தது எந்திரத் தொழிலது,
தந்தை அவ்வூர்த் தலைமகன் ஆவர்,
செந்தமிழ் முதலாச் செம்மொழி பலவும்
சிந்தித் தாயும் திறனும் உடையார்;
 
  முந்தை நகர்க்கு மொழிபெயர் அளகை; 100
  அந்நகர் வாழ்வேன், அன்புறு கொழுநன்
தன்னொடு தென்திசைத் தண்மலை எழிலெலாம்
காணிய வந்தனென்; கண்கவர் நெடுமலை,
சேணுயர் முகிலினம் சென்றிடை தழுவும்
 
  நீலப் பெருமலை, நீடுயர் சாரல் 105
  கோலத் திருமலை, கோடைக் கொடுமையைச்
சோலைச் செறிவால் தொலைத்திடு முதுமலை
இன்னன பலகண் டின்புறும் எல்லையில்
 
     
 

பொதிகைக் காட்சி

 
     
  தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்;  
  முடியும் நடுவும் முகிலினம் படர்தரக் 110
  கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச்
சில்லெனுந் தென்றல் மெல்லென வீச
நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப
அலரும் மலரும் அடருங் கடறும்
 
  பலவும் குலவி நிலவும் மாமலைக்
  காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின்
வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென்
தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ?
கன்மலைக் காப்பியம் யாத்திட முனையின
 
  பொதியம் ஒன்றே போதும் தோழி! 120

---------------------------------------------------------------

  நந்தலில் - அழிவில்லாத, அந்தம் - அழகு, சேணுயர் - மிக உயர்ந்த, முகில் - மேகம், நீலப்பெருமலை - நீலமலை, திருமலை - திருப்பதி, முதுமலை - கோடைக்கானல், அடரும் - நெருங்கும், கடறு - காடு, யாத்திட - இயற்றிட.