பக்கம் எண் :

பக்கம் :138

19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை

 
 

வஞ்சியின் ஏக்கம்

 
     
  பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும்
தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக்
கொஞ்சும் இளமை கொன்னே கழிய
அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல

 
  நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப் 5
  பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்;
எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும்
செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள்
என்னே இவள்மனம் இருந்த வாறே!
 
  பின்னே வாழ்விற் பேதுறு வாளே 10
  எனநினைந் தேங்கி இடருறூஉம் வஞ்சி  
     
 

வஞ்சி தேன்மொழியிடம் புலம்பல்

 
     
  தேன்மொழி யாகிய தெரிவையை விளித்து,
`மீன்விழி மாதே! வியனிலத் தியாண்டும்
இந்நிகர் கொடுமை எவ்வுதி அறிதி?
 
  தன்பெருங் கொழுநன் தனிமகன் வடிவேல் 15
  வன்புடை வஞ்சரால் மாய்ந்தன னாக
என்னொரு திருமகள் எழிலுறும் அருண்மொழி
மாயாத் துயரால் மாழ்குதல் கண்டு
வீயாத் துன்புள் வீழ்ந்தேன்; என்மகள்,
 
  ஓயாக் கவலை ஒழிப்பான் வேண்டித் 20
  தேயாப் பெருமனைச் செல்வமும் வாழ்வும்
மறந்தன ளாகி மலையுறை யடிகள்
திருந்திய குறளகம் சேர்ந்தனள்; என்னுளம்
 

---------------------------------------------------------------

  கொன்னே - வீணே, அஞ்சுபொறி - ஐந்துபுலம், மாழ்குதல் - வருந்துதல், ஒழிப்பான் - ஒழிக்க.