பக்கம் எண் :

பக்கம் :152பூங்கொடி

 
  இதற்கு நலத்தள் எழில்வளர் பூங்கொடி
எட்டுணை யேனும் எண்ணிலள் காமம்,
பெட்டவர் பலராய்ப் பெருகினும், இவளோ
விட்டனள் காமம், இவள்செயல் வியப்பே!
 
  பலரொடு கலந்தும் பொதுநலம் புரிந்தும் 55
  அலையும் இம்மகள் ஆசை துறந்தனள்,
நிலையும் திறம்பிலள், நினைப்பரும் வியப்பே!'
என்றுளம் வியந்தனன் ஏகுவோன் மனத்துச்
 
     
 

கோமகன் கொதிப்பு

 
     
  சுடுநெருப் பாகிச் சுடர்விடு காமம்  
  படர்ந்து விரிந்த பான்மை போலச் 60
  செக்கர் படர்ந்து சிறந்தது வானில்;
வெட்கி மூளும் விடலையின் விரிமுகம்
செக்கச் சிவந்து தெளிவிழந் ததுபோல்
மேலைத் திசையில் மெல்லெனச் செல்லும்
 
  மாலைக் கதிரவன் மறைமுகங் காட்டினன்; 65
  மாமலர்ப் பூங்கொடி மையலைப் பெறாஅக்
காம வேகங் கடுகித் தாக்குறத்
துடிதுடித் தாடும் நெஞ்சகம் போலக்
கடிதடித் தேகும் கடுங்கால் மோதலின்
 
  படபடத் தாடின பைந்தளிர்ப் பரப்பு; 70
  கூந்தலைப் பல்வகைக் கோலஞ் செய்தும்,
மாந்தளிர் மேனியில் மணியணி பூண்டும்,
கண்ணும் புருவமும் கருமை தீட்டியும்,
வண்ண ஆடைகள் வகைவகை உடுத்தும்,
 
  ஒப்பனை முடித்த ஒண்டொடி மகளிர் 75
  கப்பிய காதற் கணவரொடு கூடி
மலர்வனம் புகூஉம் மனங்கவர் காட்சி
 

---------------------------------------------------------------

  எட்டுணை - எவ்வளவு, திறம்பிலள் - மாறுபட்டிலள், செக்கர் - சிவப்பு, பெறாஅ - பெறாத, கப்பிய - நிறைந்த.