பக்கம் எண் :

பக்கம் :154பூங்கொடி

 
  நிலைத்ததம் பொருளெலாம் நீரென இறைத்துப்  
  பேரின் புறூஉம் பெருநிலக் கிழார்பால் 105
  நேரிற் சென்று நேரிழை இசைத்திறன்
கூறுதும் என்று கூடினர் ஏகி,
 
     
 

பெருநிலக்கிழார் மாளிகை

 
     
  வங்க வினைஞரும், வச்சிரத் தச்சரும்,
கொங்கக் கொல்லரும், குளிர்மலை யாளரும்,
 
  தமிழக வினைஞர் தம்மொடு கூடிப் 110
  புகழ்பெறு மாறு புதுமையின் இயற்றிய
கண்கவர் வனப்பிற் கைவினை முற்றிய
விண்தவழ் முகப்பும் வியன்பெரு வாயிலும்,
வெண்சுதைப் பாவை விளங்கிடும் அரணும்,
 
  ஒள்ளிய சாந்து வெள்ளிய நிலவொளி 115
  அள்ளி இறைக்கும் அழகுறு மதிலும்,
திரள்பெருந் தூணிற் செய்வினைப் போதிகை
மருள்படச் செய்யும் மனங்கவர் சித்திர
விதானப் பரப்பொடு விளங்குநல் மண்டபத்துக்
 
     
 

ஆடல் அரங்கு

 
     
  கண்ணுள் வினைஞர் கைத்திறத் தியற்றிய 120
  வண்ண ஓவியம் வகைவகை துலங்கும்
எண்ணருந் திறத்த எழினிகள் நாலப்
பின்னரும் முன்னரும் பேரொளி காலும்
பன்னிற விளக்கம் பாங்குற விளங்கக்
 
  கற்பனை தோற்கக் கண்கவர் முறையில் 125
  பொற்புடன் அமைத்த பொன்னிற அரங்கில்
ஆடற் கூத்தும், அவிநயக் கூத்தும்,
நாடகக் கூத்தும், நல்லிசைப் பாட்டும்
கண்டுங் கேட்டுங் களிப்பினில் திளைத்துத்
 
  திண்டும் அணையும் சேர்தரும் அமளியில் 130

---------------------------------------------------------------

  விதானம் - உள் மேற் கூறை, எழினி - திரைச்சீலை, நால - தொங்க.