பக்கம் எண் :

பக்கம் :158பூங்கொடி

 
  தொன்று முதிர்ந்த தூயநன் மொழியாம் 210
  தமிழிசை மீண்டும் தரணியில் தழைக்கத்
தந்தநற் சுவடியின் தகவெலாம் உரைத்துப்
புந்தியிற் பதியப் பொதிந்துள நுணுக்கம்
முறைமுறை தெரித்தும் இடையிடை இசைத்தும்
 
  நறைபழுத் தொழுகும் துறைத்தீந் தமிழின் 215
  பழம்பெரும் பாடல் பாங்குடன் பாடியும்
முழங்கிசை வல்ல முத்துத் தாண்டவர்
வழங்கி யருளிய வளர்தமிழ்ப் பாட்டும்,
அரும்பெறல் இசைவல அருணா சலக்கவி
 
  திறம்பட நல்கிய தீந்தமிழ்ப் பாட்டும், 220
  விரும்பிய சமநிலை வேத நாயகர்
தரும்பழச் சுவைநிகர் தண்டமிழ்ப் பாட்டும்,
என்றிவர் அனையார் இசைத்துறை வித்தகர்
துன்றுநல் லுணர்வில் துய்த்துப் பாடிய
 
  தென்றமிழ்ப் பாட்டும் தெள்ளிதின் இசைக்க, 225
     
 

பெருநிலக்கிழார் வாழ்த்துரை

 
     
  ஏந்திய மலரில் இன்சுவை நறவம்
மாந்திய வண்டென மனங்களி கூர்ந்து
விழிபுனல் ததும்பி வியந்துரை கூற
மொழிதடு மாறும் முதியவர் எழுந்து
 
  `வாழிய நெடுநாள்! வாழிய நெடுநாள்! 230
  யாழின் இசையோய் வாழிய நெடுநாள்!
ஏழிரண் டாண்டுகள் என்மனத் துறுத்திய
பாழிடர் போக்கினை! பாவாய் வாழிய!'
எனமனத் தெழூஉம் உணர்ச்சியின் இயைந்த
 
  வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர் பெரிதே. 235

---------------------------------------------------------------

  எழூஉம் - எழும்.