பக்கம் எண் :

பக்கம் : 159

21. நூல்நிலையம் அமைத்த காதை

 
 

பூங்கொடி வேண்டல்

 
     
  `வாழிய என்றெனை வாழ்த்திய பெரியீர்!
ஏழிரண் டாண்டுகள் இடரொன் றுளதெனக்
கூறிடக் கேட்டுளம் கொடுந்துயர் உற்றேன்;
மாறிய தவ்விடர் எனும்அம் மாற்றம்

 
  தொடுத்துடன் மொழிந்தீர் அடுத்துளம் மகிழ்ந்தேன் 5
  படுத்திய அவ்விடர் பாவைநான் உணர
எடுத்து மொழிய இயலுமோ பெரும!'
என்றிளம் பூங்கொடி இரங்கினள் வேண்ட,
 
     
 

மகள் வரலாறு

 
     
  `நன்று கனிமொழி நவிலுவென் கேண்மோ!  
  உருவும் எழிலும் உன்போல் ஒருத்தி, 10
  பருவம் நிறைமகள், பாவிஎன் மடமகள்
உருவளர் முழுமதி ஒப்பத் திகழ்ந்தனள்,
ஆடலும் பாடலும் அவட்குயிர் ஆகும்,
ஏடவிழ் கோதை எனக்குயிர் ஆகும்,
 
  நாடிய துறையில் நன்கனம் தேர்ந்து 15
  பாடுங் குயிலாய், ஆடும் மயிலாய்,
வீடகம் எல்லாம் பாடகம் சிலம்ப
ஊடகம் குளிர உவந்து திரிந்தனள்;
 
     
 

மகட் பிரிவு

 
     
  ஒருநாள்  
  பாட்டியல் வழுவாப் பண்ணொலி அடங்க 20
  மீட்டிய யாழும் கூட்டினுள் முடங்க  

---------------------------------------------------------------

  ஏடு - பூவிதழ், நன்கனம் - நன்கு, பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒரு வகை அணி, சிலம்ப - ஒலிக்க, ஊடகம் - உள்மனம்.