பக்கம் எண் :

கோமகன் கொலையுறு காதைபக்கம் : 173

 
  விழுமவன் தானும் வேங்கையிற் சீறி  
  எழுதரக் கனன்றுடன் இருவரும் பொருதனர்; 205
  அழிவது யாரென அறியா வகையிற்
புழுதியிற் புரண்டனர் புழுங்கினர் அழுங்கினர்;
 
     
 

துருவன் கொலை செய்யச் சண்டிலி கதறல்

 
     
  கழிமிகு காமங் கனன்றெழு மார்பிற்
குழிபட ஓச்சிக் கொடுவாள் செலுத்திப்
 
  பறித்தனன் துருவன்; பறித்தஅவ் வாள்நுனி 210
  கண்ணீர்த் துளியெனச் செந்நீர்த் துளிகளை
மண்ணிற் கிடந்தோன் மார்பினிற் சிந்த,
விரிபடு மார்பில் வேட்கைப் பெருக்கெனக்
குருதிப் பெரும்புனல் கொப்பளித் ததுவே;
 
  அந்நிலை காண அஞ்சிய மெல்லியல் 215
  நன்மலர்க் கையால் தன்முகம் புதைத்துக்
கூஉய் அழுதனள், கொடுமை என்றனள்,
ஆஅய்புலம் இன்றி அடாஅது செய்தனை!
எனப்பல கூறி இரைந்தனள் இரங்கினள்;
 
  மனத்திகில் கொண்ட மணாளன் மலைத்தனன்; 220
     
 

கோமகன் முடிவும் - துருவன் ஓடிமறைதலும்

 
     
  செந்நீர்க் காட்டிற் சீரழிந்து கிடப்போன்
புண்ணீர் வடிந்து பொங்கிய வாயிதழ்
பூஉங்ங் கொடிஎனப் பூஉங்ங் கொடியெனக்
கூஉம்பி யசைந்தன, குளிர்ந்ததவ் வுடலம்;
 
  தேஎம்பி யழுதன திங்களும் வானமும்; 225
  ஐயமுஞ் சீற்றமும் ஆட்கொண் டமையால்
வெய்யவ னாகி வீண்கொலை புரிந்து
செய்வதொன் றறியாது திகைத்திடுந் துருவன்
பெய்வளை யாளொடும் உய்வகை கருதிக்
 
  காணா தேகிக் கரந்தனன் விரைந்தே. 230

---------------------------------------------------------------

  ஆஅய்புலம் - ஆராயும் அறிவு, அடாஅது - தகாதது, பூஉங்ங் கொடி - பூங்கொடி, கூஉம்பி - குவித்து, தேஎம்பி - தேம்பி.