பக்கம் எண் :

சிறைப்படு காதைபக்கம் : 179

 
  அன்பொடு வினவும் ஐய வினாக்கட்
கின்புடன் விடைகள் இறுப்பது நும்கடன்;
துன்புகள் நும்மைத் தொடரா; உறுதி;
வன்பகை இறந்தோற்கு வாய்த்ததும் இல்லை;
 
  பின்பவன் தற்கொலை புரிந்ததும் இல்லை; 135
  செயப்படு கொலையெனச் செப்பலும் செய்தீர்;
நயத்தகும் மன்றினுள் நல்லவள் பூங்கொடி
சண்டிலி தன்துணை கொண்டு வதிவதும்
விண்டனிர்; இவற்றால் விளங்குவ தென்னை?
 
  ஒண்டொடி மகளிர் ஒருவர்மேல் ஐயம் 140
  உற்றனிர் கொல்லோ? மற்றிவர் இருவரும்
குற்றம் புரிதல் கூடுமென் றெண்ணம்
பெற்றனிர் கொல்லோ? தெற்றென மொழிக!'
 
     
 

மாணவன் துடிப்பு

 
     
  என்றுரை கேட்டோன் `ஈதென் கொடுமை?  
  நன்றுரை புகன்றீர்! நானதற் கொருப்படேன் 145
  கொன்றெனைச் சிதைப்பினும் கூறேன் அம்மொழி;
பயிற்றிய தாயின் பால்முகம் நோக்கின்
அயிர்த்தலும் ஒல்லுமோ? ஐயகோ அடாஅது!
பாழ்மகன் இறந்தும் பழியினைத் தந்தனன்;
 
  ஆழ்கடல் உலகில் அவள்நிகர் பெண்மகள் 150
  சூழினும் காண்கிலம்; தூயவள் தனக்குத்
தாழ்வுகள் வருதல் தகுமோ ஐய!
ஊழ்வினை என்றொன் றுளதெனச் செப்புவர்
பாழ்வினை யிந்தப் பழிமொழி வடிவிற்
 
  சூழ்ந்தது கொல்லோ? சூழ்ந்தது கொல்லோ?' 155
  என்றவன் அரற்றி யிரங்கித் துடிக்க;  
     
 

காவலர் நயவுரை

 
     
  `யாது நிகழ்ந்த திங்ஙனம் அரற்றினை?  

---------------------------------------------------------------

  அடாஅது - தகாது.