பக்கம் எண் :

பக்கம் : 183

24. சிறைவிடு காதை

 
 

பெருநிலக்கிழார் வருந்துதல்

 
     
  சிறைபட் டாங்கட் செல்வோள் முகத்து
மறைப்பரு கவலை வெளிப்படல் கண்டு
மாளாத் துயரால் வதைந்திடுங் கிழவர்
`வாளா இனியிரேன் வருவது வருக!

 
  நாளை மீட்பேன் நங்காய் கவலேல்' 5
  என்றுதம் விழியில் இரங்குநீர் துடைத்து
நின்றவர் `அந்தோ நேர்மைக் கிடமிலை,
நல்லவை செய்தார்க்கு நலிவிலை என்றும்
அல்லவை செய்தார்க்கே அழிவுகள் என்றும்
 
  சொற்றன யாவும் வெற்றுரை யாகும்; 10
  முற்றா இளங்கொடி முள்நுனி யளவும்
குற்றம் புரிந்திலள் கொடும்பழி வந்ததே;
எற்றோ உலகியல்!' என்றவர் ஏகினர்;
 
     
 

ஊரவர் பழித்தல்

 
     
  இசைஇசை எனச்சொலி ஏய்த்தனள் ஊரை!  
  வசையென நாணாள் மணவினை நாடாள் 15
  துறவினள் போலத் தொண்டெனும் பெயரால்
இரவிடை நிகழ்த்தும் இழிசெயல் எத்தனை!
ஒருநாள் வெளிவரும் உண்மை என்றனர்;
எழில்நிறை உருவமும் இளமைப் பருவமும்
 
  கழிமிக வுடையவள் காரிகை யிவள்தான்! 20
  கலைதெரி பெயரால் கட்டிளங் காளையர்
பலர்பலர் அவ்விடைப் பயில்வோர் உளரால்
துறவும் தூய்மையும் தொலைவினில் ஓடி
மறையும் அன்றி வாழுமோ என்றனர்;
 
  பாயும் புலியும் பசும்புல் வாயும் 25
  காயழல் தீயும் தூயநற் பஞ்சும்
நெருங்குமேல் விளைவதை நீணிலம் அறியும்;
உறுகேழ் வரகினில் ஒழுகும் நெய்யெனில்
 

---------------------------------------------------------------

  எற்றோ - எத்தன்மைத்தோ? புல்வாய் - மான்.