பக்கம் எண் :

கிழார்திறம் அறிந்த காதைபக்கம் : 197

 
  `துன்புளங் கொண்டோ தூமொழி புலம்பினை? 210
  அன்புளம் துயரினை ஆற்றுதல் அரிதே!'
என்பது கேட்ட இடருறும் அருண்மொழி
 
     
 

முன்வரலாறு கூறுதல்

 
     
  `புலம்பினே னல்லேன் நிகழ்ந்ததை எண்ணிக்
கலங்கினேன் பெரும! நலங்கிளர் பூங்கொடி
 
  நிலங்கிழார் மகண்முறை நேரிதின் உரியள், 215
  மேலும் விளம்புவென் மேலவர் கிழத்தி
கோலம் மிகுந்தவள் ஏலங் குழலி
ஒருவயிறு தந்த உடன்பிறப் பாட்டி,
சிறுபரு வத்தே செந்தமி ழிசையில்
 
  பெருகிய புலமையள் பேணும் புகழினள் 220
  ஈழம் முதலா இசையமு தளிப்போள்
ஆழி கடந்து காழகம் சென்றனள்;
சென்றவள் இவரை ஒன்றிய மனத்து
மன்றல் புரிந்தனள், மணிநகர் மறந்தனள்;
 
  காதலும் கலப்பும் கலந்தஇம் மணத்தைத் 225
  தீதெனக் கடிகுவம் எனமனங் கொண்ட
தவ்வை யவளென் தாய்க்கொரு முடங்கல்
கவ்விய துயரொடு வரைந்தது தவிர
யாண்டுளாள் என்பது யாதொன் றறியோம்;
 
  ஆண்டுபல வாயினும் அவள்நிலை சிறிதும் 230
  அறிய கில்லேம், அரிவைநம் பூங்கொடி
தெரியச் செய்தனள் பெரியவர் மகளிவள்'
எனுமிவை யனைத்தும் இயம்பி நின்றனள்;
 
     
 

உறவறிந்து மகிழ்தல்

 
     
  இனைதுயர் நீங்கிய இருநிலக் கிழவர்  
  `மகளே மகளே வாவென் மகளே! 235

---------------------------------------------------------------

  துன்புளம் - துன்ப உள்ளம், தூமொழி - அருண்மொழி, மகண் முறை - மகள்உறவு, நேரிதின் - நேர்மையாக, உடன்பிறப்பாட்டி - உடன்பிறந்தவள், ஈழம் - இலங்கை, மன்றல் - திருமணம், கடிகுவம் - கண்டிப்போம், தவ்வை - தமக்கை, வரைந்தது - எழுதியது, இனைதுயர் - வருத்தம்.