பக்கம் எண் :

யாழ் நூல் பெற்ற காதைபக்கம் : 203

 
 

கோனூர் வள்ளலின் பேருதவி

 
 

முற்படும் இப்பணி முற்றுறா முன்னர்

 
  எற்கொரு கொடுநோய் ஈண்டுவந் துற்றது; 70
  நடத்தற் கியலா நலிவினுள் வீழ்ந்து
படுத்துழன் றேனைப் பரிவுடன் அணுகித்
தொடுத்திடும் இந்நூல் முடித்திட வேண்டிக்
குலவிய நற்புகழ்க் கோனூர் வள்ளல்
 
  மலைநிகர் செல்வர் மனவளச் செம்மல் 75
  இடனறிந் தாங்கண் உடனிருந் தருளிக்
கடனுணர்ந் தாற்றிய கைம்மா றறியாப்
பெரும்பே ருதவியின் பெற்றியை விளக்கக்
கரும்பின் மொழியாய்! கண்டிலேன் ஒருசொல்;'
 
     
 

பூங்கொடி யாழ்நூல் பெற்று மகிழ்தல்

 
   
  எனமொழிந் தவட்கொரு யாழ்நூல் ஈந்தனர்; 80
  மனமிக மகிழ்ந்த மலர்க்கை ஏந்தித்
தொழுது வாங்கினள் துடியிடைப் பூங்கொடி
`முழுதுணர் பெரும! முத்தமிழ்த் தலைவ!
பழுதறும் இந்நூல் படைத்தநும் ஆற்றல்
 
  தொழுதக வல்லது சொலுமுறை தெரியேன்; 85
  தமிழிசைக் கிந்நூல் தற்காப் பாகும்;
இமிழ்கடல் உலகில் இசைக்கோர் அணிகலன்;
அமிழ்தம் பெற்றே னாகினென் வாழிய!
 
   
 

பூங்கொடி புகழ வள்ளல் நாணுதல்

 
   
  கொடையாற் சிறந்த கோனூர் வள்ளல்
  நடையாற் சிறந்த நம்மயில் வாகனர்க் 90
  குற்றுழி உதவிய உயர்பெருந் தகைமையாற்
கற்றவர் உலகம் கடப்பா டுடைத்து
 

---------------------------------------------------------------

  முற்றுறா - முடிவுறாத, எற்கு - எனக்கு, உழன்றேனை - வருந்திய என்னை, கடன் - கடமை, பெற்றி - தன்மை, துடியிடை - உடுக்கை போன்ற இடை, இமிழ்கடல் - ஒலிக்கும் கடல், நடை - ஒழுக்கம்.