பக்கம் எண் :

பக்கம் :206பூங்கொடி

 

இலக்கியத்தில் இசையுணர்த்தப் பூங்கொடி
நன்றிபுகலுதல்

 
   
  நெஞ்சினை யள்ளும் செஞ்சொற் சிலம்பில்
வேனிற் காதையும் வேட்டுவ வரியும்
ஆனினங் காக்கும் ஆய்ச்சியர் குரவையும்
பத்துப் பாட்டும் பரிபாட் டேடும்
 
  வைத்துக் கிடக்கும் பண்வகை வகுத்து 150
  நாவின் அரசர் நலந்திகழ் பிள்ளை
நாவலூர் நம்பியெனும் நற்றமிழ் வல்ல
மூவர் அருளிய தேவா ரத்தொடு
தேரும் செந்தமிழ்த் தேறல் மாந்திய
 
  மாறன் திருவாய் மலர்ந்தருள் மொழியும் 155
  அருண கிரியார் அருள்திருப் புகழும்
மருவிய பண்களில் வகையெலாம் தெரித்து,
வாழிய பாவாய் வாழிய தமிழால்!
 
  வாழிய உலகம் வாழிய தமிழிசை! எனவாங்கு 160 150
  வாழ்த்தினர் எழில்மயில் வாகனர் அவளை;
`வாழ்த்துக பெரும! வாழ்த்துக பெரும!
காழ்ப்பும் பகையும் கடிதினில் விலகிப்
பார்த்தலம் யாண்டும் பைந்தமிழ் பரவும்
 
  யாழ்நூல் என்னுமிவ் வோர்நூல் அளித்தனை 165
  வாழ்நாள் அனைத்தும் வாழ்த்தி வணங்குவென்'  
  என்றவள் வணங்கி இனிதிருந் தனனே. 167

---------------------------------------------------------------

  நாவின் அரசர் - திருநாவுக்கரசர், பிள்ளை - திருஞானசம்பந்தர். நாவலூர் நம்பி - சுந்தரர், தேறல் - தேன், மாறன் - நம்மாழ்வார், காழ்ப்பு - பொறாமை, பார்த்தலம் - உலகம்.