பக்கம் எண் :

அயல்நாடு சென்றுவந்த காதைபக்கம் : 209

 

புரிதர வுணர்த்திப் புதுமைக் கலைகள்
ஆக்குவென் ஆக்குவென் அப்பெரு முயற்சியால்
 
  தேக்குவென் பெரும்புகழ் தீந்தமிழ் மொழிக்கே, 50
  இன்னே எழுவேன் எனக்கேன் கலக்கம்?
அன்னையும் வாழ்த்தி அனுப்புவள் என்னை;
 
 

அனைவரிடமும் விடை வேண்டுதல்

 
  கண்டும் பாகும் கனியும் நிகர்க்கும்
தண்டமிழ் காக்கும் தொண்டுளம் கொண்ட
 
  கோட்டை நகர்தரும் கோனூர் வள்ளலும், 55
  பாட்டுள் புதைந்த பழம்பெரும் யாழை
மீட்டும் கொணர்ந்த மேலவர் தாமும்,
உற்றுழி உதவி உறவின் முறையால்
பெற்றோ ராகிய பெருநிலக் கிழவரும்,
 
  தந்தையாய்த் தலைவராய்த் தாழ்விலாச் செல்வராய்ச் 60
  செந்தமிழ் மைந்தராய்ச் சிந்தையில் தூயராய்
வந்தருள் தந்தவர் வாய்மையில் நின்றவர்
குறளகங் கண்ட குன்றுறை யடிகளும்,
அருளுளங் கொண்ட அனைவரும் வாழ்த்திப்
 
  பெருநிலம் யாண்டும் தரும்புகழ் நிறீஇ 65
  வருகென உரைத்து வழங்குக விடையே'
உரையிவை கூறி உவப்புடன் இருந்தனள்;
 
 

அருண்மொழியும் பிறரும் வாழ்த்துதல்

 
  அயல்நா டேகும் அரிவையைத் தழுவிக்
கயல்விழி அருண்மொழி கண்ணீர் மல்கி,
 
  `வெல்கநின் பணியே வெல்கநம் தமிழே, 70
  செல்கநீ யாண்டும் செந்தமிழ்ப் பண்பைச்
சொல்கநீ சொல்கநீ சோர்வுறேல் கண்மணி!
பல்கலைப் பொருளும் பயில்கநீ' என்றனள்;
 

---------------------------------------------------------------

  புரிதர - புரியுமாறு, தேக்குவென் - நிறைப்பேன், இன்னே - இப்பொழுதே, மேலவர் - மயில்வாகனர், நிறீஇ - நிறுவி.