பக்கம் எண் :

அயல்நாடு சென்றுவந்த காதைபக்கம் : 211

 

தென்னாட் டவர்போல் திகழும் இயல்பினர்
தமிழின் நலந்தேர் தகவாற் பெரியர்
கமிலர் என்னுங் கற்றுணர் சுவைஞரைக்
 
  கண்டுரை யாடிக் களிமகிழ் கூடித் 100
  தொண்டொடு வாழ்வைத் தொடுத்தவள் இருந்தனள்;
அவர்தாம் நறுந்தேன் மிதக்கும் நற்சுளை போல
அருந்துவோர் நெஞ்சினை அள்ளும் சுவைசேர்
 
  செஞ்சொற் சிலம்பாம் செழுங்காப் பியமும் 105
  விஞ்சுங் காதல் கொஞ்சும் வகையால்
அஞ்சு திணையால் அமைந்தநற் கலியும்
நாட்டுணர் வூட்டும் பாட்டுத் திறத்தால்
கூட்டுணர் வூட்டிக் கொடுங்கோல் சாய்த்துத்
 
  தமிழுக் குய்வகை தந்தநற் பாரதி 110
  அமிழ்தச் சுவைதேர் அருங்கவித் தொகுப்பும்
அனையன பிறவும் அவர்மொழிக் கேற்றி
இனியநற் பணிபுரி இயல்பினர், செயலினர்;
கமிலர் நாட்டிற் கற்பன கற்றுத்
 
  தமிழர் நாட்டுத் தகவுகள் விளக்கி 115
 

உருதின் நாட்டில் பூங்கொடி

 
  மீள்வோள் உலகில் மேம்படு முறையால்
ஆள்வோர் நாட்டினை அணுகினள், ஆங்கு
மேலவர் கீழவர் வேற்றுமை யில்லை,
உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஒருவரும் இல்லை,
 
  வறியரும் இல்லை உரியரும் இல்லை, 120
  சரிநிகர் என்னும் சமநிலை கண்டனள்;
உடைமைகள் யாவும் உலகப் பொதுமை
 

---------------------------------------------------------------

  கமிலர் - கமில்சுவலபெல், செக்கோசுலேவியா; நற்சுளை - பலாச்சுளை, அஞ்சுதிணை - ஐந்திணை, கூட்டுணர்வு - ஒருமைப்பாடு, தகவுகள் - தகுதிகள்.