பக்கம் எண் :

பக்கம் :216பூங்கொடி

 

பிறமொழி தீதெனப் பேசலும் அறிகிலம்
உரியநம் மொழியே உயர்வுறல் வேண்டி
 
  இரவும் பகலும் இடரிலும் முயல்வேம்; 50
  யாதும் ஊரெனில் எம்முடை ஊரகம்
தீதுறல் வேண்டுமோ? சீருறல் தீமையோ?
யாவரும் கேளெனில் யாயுடன் தந்தையும்
மேவருங் கேடுகள் மேவுதல் வேண்டுமோ?
 
  அன்னவர் நலம்பெற ஆர்வம் பூணுதல் 55
  புன்மையோ? பகையும் பூத்திடல் என்னையோ?
உலகப் புகழ்பெறு தலைவரும் கவிஞரும்
பலகற் றடங்கிய பண்புயர் மாந்தரும்
தாய்மொழி வேட்கை தணிந்திலர் துறந்திலர்;
 
  ஆய்புலப் பாங்கினர் அறிகுவர் இதனை; 60
  தமிழின் பகைவர் சாற்றும் மொழியினை
உமிழ்க! மெய்ம்மை உணர்க! எழுக'
என்பன கூறி எழுச்சி யூட்டலும்
மன்பதை சிந்தனை வளர்ந்தது மனத்தினில்;
 
     

இசைவாணர் எதிர்ப்பு

     
  பாடும் துறையில் பழகிய மாந்தர் 65
  தேடும் பொருளாற் சிறந்தோர் சிலர்தாம்
கூடிச் சிலசொல் குறித்தனர் ஆங்கண்;
`உள்ளம் உருக்கி ஒப்பிலா இன்ப
வெள்ளம் பெருக்கும் வியன்பே ரிசையில்
 
  மொழியால் வேற்றுமை மூட்டுதல் நன்றோ? 70
  இழிவாம் இச்செயல்; மொழியிங் கெதற்கு?
குழுலும் யாழும் கொடுத்திடும் இசையில்
மொழிஎது கண்டோம்? பழிஎது கண்டோம்?
இசைவளந் தமிழில் யாண்டுக் கண்டோம்?
 

---------------------------------------------------------------

  யாய் - தாய், மேவரும் - விரும்பத்தகாத, புன்மையோ? - இழிவோ, என்னையோ? - ஏனோ?, தணிந்திலர் - அடங்கினாரிலர்.