பக்கம் எண் :

சொற்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 217

  இசையுணர் வுடையார் எம்மொழி யாயினும் 75

 

நசையுடன் ஏற்று நடப்பது கண்டோம்;
மொழிவெறி விடுத்து முயல்வதே முறை'என
வழிவகை கூறி வம்புகள் பேசினர்;
 
 

பூங்கொடி மறுமொழி - குயிலும் காகமும்

     
  சினந்தெழும் உணர்ச்சியின் செற்றம் அடக்கி  
  மனந்தெளிந் தரிவை மாற்றம் கொடுத்தனள்; 80
  `கூவும் குயில்தன் குரலாற் பாடும்;
காகம் தன்குரல் கொண்டே கரையும்
இரவற் குரலைப் பெறுவது காணேம்;
பறவையின் இயல்பைப் பகுத்தறி வுளநாம்
 
  அறிவதும் இல்லேம்; தெளிவதும் இல்லேம்; 85
  நமக்குள மொழியை நாடுதல் தவிர்த்துப்
பிறர்க்குள மொழியாற் பிதற்றுதல் உடையேம்;
 
     

ஊனுயிர் உருக்கும் பாட்டு

     
  உருகும் இசையால் உள்ளம் என்றீர்!
பொருளும் உணரப் புரியும் மொழியால்
 
  மருவிய பாடல் வழக்கும் இனிமையை 90
  ஒருமுறை எண்ணுக! ஊனும் உயிரும்
நெஞ்சுடன் கலந்து நெக்குநெக் குருகி
விஞ்சுபே ரின்ப விளைவினில் திளைக்கும்
 
     

யாழும் குழலும் போதுமோ?

     
  குழல்தரு மிசையில் மொழியிலை என்றீர்!  
  அழகிது நும்மொழி; அவ்விசை சாலுமேல் 95
  மிடற்றிசை வேண்டுமோ? வெறொரு மொழியில்
தொடுத்திடும் பாடலும் தொகையுடன் பாடுவோர்
கூட்டமும் வேண்டுமோ? குழல்முத லாகக்
காட்டும் அவ்விசைக் கருவிசைக் கருவிகள் சாலுமே!
 

---------------------------------------------------------------

  செற்றம் - சினம், மாற்றம் - மறுமொழி, நெக்குநெக்குருகி - மிக இளகி, சாலுமேல் - போதுமெனில்.