பக்கம் எண் :

சொற்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 219

  செந்தமிழ் மொழியொடு செற்றம் என்கொலோ?
வந்துடன் தாய்மொழி வளர்த்திடக் கூடுக!
முந்துநம் தமிழிசை மொய்ம்புறப் பாடுக!'
செவ்விதின் இவ்வணம் செப்பின ளாக
 

 

அவ்விய நெஞ்சினர் ஆங்காங் கமைந்தனர்; 130
 

தமிழ் வழிபாட்டுக் கெதிர்ப்பு

     
  `வழிபடு துறையிலும் வண்டமிழ் வேண்டுதும்;
இழிநிலை போதும்; இறைவன் திருமுனர்
எம்முயர் மொழியே இசைத்திடல் விழைகுதும்`
இம்மொழி கேட்டோர் எரியெனக் கனன்றனர்;
 
  `கோவிலில் தமிழா? கொடுமை! கொடுமை! 135
  நாவினில் இதுசொல நடுக்குறூஉம் எம்முளம்!
முன்னோர் நம்மினும் முழுமதி யுடையர்
அன்னோர் நெறியினை அழித்திட முயல்வதோ?
முந்திய மொழிகளுள் மூத்ததே ஆயினும்
 
  மந்திர வலிமை செந்தமிழ்க் குளதோ? 140
  இடமிகு கோவிலுள் இறைவன் முன்னர்க்
கடவுண் மொழியே கழறுதல் வேண்டும்;
மந்திர மொழியாம் மறைமொழி விடுத்துச்
செந்தமி ழோதின் தெய்வம் உவக்குமோ?`
 
  தேவரின் தூதுவர் ஏவலர் போலிவை 145
  கூவினர்; மேலவர் கொள்ளும் வகையாற்
சான்றுடன் மறுமொழி சாற்றுவள் பூங்கொடி;
 
     

முன்னோர் நெறிதான்

     
  `ஈன்றவட் பழிக்கும் இயல்பினை ஏன்றுளீர்!
தமிழக வரைப்பில் தாய்மொழி ஆட்சி
 
  திகழுதல் வேண்டும்; தேவுறு கோவில் 150
  விலக்குடைத் தன்று; மயக்குறல் என்கொல்?
கலைக்கோர் உறைவிடம் கட்டியோர் தமிழர்
 

---------------------------------------------------------------

  ஏன்றுளீர் - ஏற்றுள்ளீர்.