பக்கம் எண் :

பக்கம் :220பூங்கொடி

  உள்ளுறை கடவுளும் உரியவர் நமக்கே
அள்ளுற வணங்குவோர் அயலவர் அல்லர்
 
  இறைவினை புரிவோர் ஏதிலர் அல்லர் 155
  முறைஎது? வழிபடு மொழிஎது? புகல்வீர்!
முன்னோர் நெறியினில் முரண்பா டென்றீர்!
முன்னோர் யாரென முடிந்த முடிபாச்
சொன்னோர் யாரே? முன்னோர் அவரினும்
 
  முற்பட வாழ்ந்தவர் எப்பெய ருடையார்? 160
  அப்பெரு முன்னோர் ஆண்டவன் மாட்டுச்
செப்பிய மொழிஎது? செந்தமி ழன்றோ?
திருவாய் மொழியெனத் திருவா சகமென
இறைவா! இறைவா! என்றவர் ஓதிய
 
  திருவாய் மொழிஎது? தீந்தமி ழன்றோ? 165
  அவரெலாம் முன்னோ ரல்லரோ? இறைவன்
செவிதனில் அம்மொழி சேர்ந்ததும் இலையோ?
 
 

மந்திர வலிமை தமிழ்மொழிக்குண்டு

     
  அரவணி இறைவனை ஆரூர் நம்பி
இரவிடைப் பரவைபால் ஏவிய தெம்மொழி?
 
  இடங்க ருண்ட இளஞ்சிறு மகனை 170
  உடம்பொடும் உயிரொடும் உய்வித்த தெம்மொழி?
ஒடுங்கிய எலும்பினை உருவெழில் குறைவிலா
மடந்தையின் வடிவா மாற்றிய தெம்மொழி?
அருமறை வினைஞரால் அடைபடு கதவம்
 
  திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி? 175
  கணிகணன் முன்செல மணிவணன் அடியிணை
பணிதிரு மழிசையர் பதறினர் பின்செலப்
படப்பாய் அணைமேல் பாற்கடல் மிசையே
கிடப்போன் தன்மனைக் கிழத்தியும் உடன்வர
 

---------------------------------------------------------------

  அள்ளுற - வாயுற, ஆரூர் நம்பி - சுந்தரர், பரவை - பரவை நாச்சியார், இடங்கர் - முதலை, கதவம் - கதவு.